எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு எனக்கூறி சொத்துகளை பதிவு செய்ய மறுப்பது சட்டவிரோதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.வசந்தகுமாரி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: ஊட்டியில் எனது கணவரின் தாத்தா நல்லுசாமி நாயுடுக்கு சொந்தமான 5 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது கணவர் பிரசாத் பெயருக்கு அவர்உயில் எழுதி வைத்தார். அந்த உயில் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது கணவர் கடந்த 1993-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

அந்த நிலத்துக்கு நானும், எனது மகளும் சட்டப்பூர்வ வாரிசுகளாக உள்ள நிலையில், எனது மாமா பாண்டுரெங்கன் இந்த உயில் விவகாரத்தை மறைத்து அந்த நிலத்தை டி.ஜி.பிரிகெட் என்பவருக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார்.

இதை எதிர்த்து ஊட்டி சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் எனக்கு சாதகமாக எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு வந்தது. அந்த உத்தரவின்பேரில் அந்த நிலத்தை எங்களது பெயருக்கு பதிவு செய்து கொடுக்கும்படி ஊட்டி சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றபோது, எக்ஸ்பார்ட்டி தீர்ப்பின் அடிப்படையி்ல் பதிவு செய்து கொடுக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

எனவே, அந்த நிலத்தை எங்களது பெயரில் பதிவு செய்து கொடுக்க ஊட்டி சார்- பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “எந்த சுற்றறிக்கையாலும் சட்டத்தையோ அல்லது விதிகளையோ மீற முடியாது.

இதுபோல பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு எனக்கூறி சொத்துகளை பதிவு செய்து கொடுக்க மறுப்பது சட்டவிரோதம்.

மனுதாரரின் சட்டப்பூர்வமான உரிமை நீதிமன்றத்தில் நிலைநாட்டப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில்தான் பரிகாரம் தேட முடியும்.

எக்ஸ்பார்ட்டி தீர்ப்பு ரத்து செய்யப்படாதவரை அல்லது அதற்கு தடை விதிக்கப்படாத வரை அந்த தீர்ப்பு சட்ட ரீதியாக செல்லத்தக்கதே. தீர்ப்பை சோதனை செய்து பார்க்கும் அதிகாரம் சார்-பதிவாளர்களுக்கு இல்லை. எனவே, மனுதாரரின் நிலத்தை சட்டப்படி பதிவு செய்து கொடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE