“இன்னும் 28 அமாவாசைகள் தான்” - அதிமுக எம்எல்ஏ மீதான வழக்குப் பதிவுக்கு இபிஎஸ் கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: “அதிகாரம் நிரந்தரமானது என்ற நினைப்புடன் திமுகவினரின் சொல்படி செயல்படக்கூடிய ஒருசில அரசு அதிகாரிகள் மற்றும் ஒருசில காவல் துறையினர், சட்டப்படி இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு நியாயமாக, சட்டத்தின்பால் நேர்மையாக பணிபுரிய வேண்டும். மேட்டுப்பாளையம் அதிமுக எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்ட 20 பேர் மீது காவல் துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளது” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தற்போது நடப்பது மக்களாட்சியா? அல்லது கொடுங்கோலன் ஜார் மன்னன் ஆட்சியா? என்று தெரியாமல் மக்கள் தவிக்கும் நிலை, பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலினின் நிர்வாகத் திறமையற்ற செயல்பாடுகளால் ஏற்பட்டுள்ளது வேதனைக்குரியது. தமிழகமே தங்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டது போல், பல்வேறு அடாவடித்தனங்களில் திமுக நிர்வாகிகளுடன் இணைந்து ஒருசில கொத்தடிமை அதிகாரிகளும் திமுக நிர்வாகிகளாகவே நடந்துகொள்வது கேவலத்தின் உச்சம்.

அதிமுக அமைப்புச் செயலாளரும், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே. செல்வராஜ், கடந்த ஜன.23 அன்று மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளரிடம் தொலைபேசி வாயிலாக உரிய முன் அனுமதி பெற்று, மேட்டுப்பாளையம் நகராட்சிக் கவுன்சிலர்கள் தனசேகரன், சுனில்குமார், விஜயலட்சுமி, முத்துசாமி, மருதாசலம் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன், தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து, மேட்டுப்பாளையம் நகர மன்ற வார்டு எண். 30, சாந்தி நகரில் கான்கிரீட் சாலை அமைக்க மதிப்பீடு வழங்கக் கோரி பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் நகராட்சி நிர்வாகம் மதிப்பீடு வழங்காததால், அப்பகுதி மக்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என்றும், எனவே உடனடியாக கான்கிரீட் சாலை அமைப்பதற்கான மதிப்பீட்டினை வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், தனது உறுப்பினர் நிதியில் இருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்துப் பணிகளையும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் மேற்கொள்ளும்படி நகராட்சி ஆணையாளரிடம் கோரி இருக்கிறார்.ஏ.கே. செல்வராஜ் நகராட்சி ஆணையருடன் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, மேட்டுப்பாளையம் திமுக நகர் மன்றத் தலைவர், துணைத் தலைவர், திமுக நகர் மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என 30-க்கும் மேற்பட்டோர் நகராட்சி ஆணையர் அறையில் வேண்டுமென்றே நுழைந்து, எப்படி எதிர்க்கட்சியைச் சேர்ந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற வார்டு உறுப்பினர்களுடன் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் கலந்துரையாடலாம் என்று தேவையில்லாமல் பிரச்சினை செய்துள்ளனர்.

ஆளும் வர்க்கத்தின் திமிர்த்தனத்தின் உச்சமாக மக்கள் நலப் பணிகளை துவக்கக் கோரிய சட்டமன்ற உறுப்பினர் பேரிலும், அவருடன் சென்ற நகராட்சிக் கவுன்சிலர்கள், நகரச் செயலாளர், மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் உள்ளிட்ட 20 பேர்கள் மீதும், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட சுமார் 30 நகராட்சி அலுவலர்களிடம் கையெழுத்து வாங்கி பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொய் வழக்கில் குற்ற எண். 51/2024-ன்கீழ், பெண்களை தொந்தரவு செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் திமுக மோசடி அரசின் ஏவல் துறையாக விளங்கும் மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபோன்ற அடக்குமுறையை ஏவி விடுவதன் மூலம் அதிமுகவினரை முடக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றத்தைத்தான் சந்திப்பார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுகவைச் சேர்ந்தவர்கள், முதல்வர் முதல் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் வரை, பொதுச் செயலாளர் முதல் கடைக்கோடி தொண்டர்கள் வரை அதிகாரிகளிடம், அதுவும் குறிப்பாக பெண் அதிகாரிகளிடம் எப்படி பேசுவார்கள் என்பதை அனைத்து அதிகாரிகளும், பொதுமக்களும் நன்கு அறிவார்கள். அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆண், பெண் பாகுபாடு பாராமல், அதிகாரி என்ற முறையில்தான் பேசுவார்களே தவிர வேறு முறையில் அல்ல.

இதுவே, திமுக முதல்வர் முதல் பஞ்சாயத்து கவுன்சிலர் வரை மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகாரிகளுக்கும், பெண்களுக்கும், மற்றவர்களுக்கும் கொடுக்கும் மரியாதை அனைவரும் அறிந்ததே. அதுவும் ஒருசில அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுவெளியில் அதிகாரிகளிடம் நடந்து கொண்ட பல நிகழ்வுகள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன.

பொதுவெளியில் பெண் காவலரிடம் வரம்புமீறி நடந்துகொண்ட விருகம்பாக்கம் திமுக நிர்வாகி மீது இதுவரை காவல்துறை FIR-க்கு மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணப்பாறை மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரிகள், ஜேசிபி இயந்திரங்களை அமைச்சர் பெயரைச் சொல்லி காவலர்களிடமிருந்து அடாவடியாக மீட்டுச் சென்ற திமுக பிரமுகர், திருச்சியில் காவல் நிலையத்திலேயே பெண் காவலர் தாக்கப்பட்ட நிகழ்வுகள் என்று அடுக்கிக்கொண்டே செல்லலாம் . இவற்றின் மீதெல்லாம் காவல் துறையினரின் நடவடிக்கை ஏதும் இல்லை. இதுதான் திமுகவினர் பெண் காவலர்களுக்குத் தரும் மரியாதை. சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதாகிருஷ்ணனிடம் நேரடியாக பணம் கேட்ட திமுக நிர்வாகியின் உரையாடல் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியை மருத்துவப் படிப்பில் சேர்க்கிறேன் என்றுகூறி, வீட்டு வேலை வாங்கியும், தீயால் சுட்டும், கத்தியால் வெட்டியும் சித்ரவதை செய்த திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் மற்றும் மருமகளை தப்பிக்க விட்டுவிட்டு, பல தனிப்படைகள் அமைத்து தேடிக்கொண்டிருக்கிறது திமுக அரசின் காவல் துறை. இவ்வாறு பெண்களுக்கு திமுகவினரால் இழைக்கப்படும் கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதே நேரம், நடுநிலையோடு செயல்பட வேண்டிய காவல் துறை, ஆளும் திமுகவினரின் பேச்சைக் கேட்டு, பொய் வழக்குகள் போட்டு எதிர்க்கட்சி நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என்ற இருமாப்பில் செயல்படுவது அழகல்ல. இந்த ஆட்சியாளர்களால் காழ்ப்புணர்ச்சியோடு புனையப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திக்கும் திறன் அதிமுகவுக்கு உண்டு.

"நான் முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்", என்று அடிக்கடி கூறும் முதல்வருக்கு, அவருடைய தந்தையின் குறளோவியத்தில் ஒன்றை நினைவுபடுத்துகிறேன். நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். ( குறள் 553) விளக்கம்: நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறை செய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான். நம் தாய் நாடாம் தமிழ்நாட்டை இனியும் திமுக ஆட்சியாளர்கள் கெடுக்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்று உறுதியளிக்கிறேன்.

அதிகாரம் நிரந்தரமானது என்ற நினைப்புடன் திமுகவினரின் சொல்படி செயல்படக்கூடிய ஒருசில அரசு அதிகாரிகள் மற்றும் ஒருசில காவல் துறையினர், சட்டப்படி இன்னும் 28 அமாவாசைகள் மட்டுமே திமுக அரசு ஆட்சியில் இருக்கும் என்பதைக் கருத்திற்கொண்டு நியாயமாக, சட்டத்தின்பால் நேர்மையாக பணிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிடில், அதற்கான விலையை அவர்கள் கொடுத்தே தீர வேண்டும் என்று எச்சரிக்கிறேன்.

இருமுறை சட்டமன்ற உறுப்பினர், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் மாநில அமைச்சர் என்று பல பொறுப்புகளை வகித்த, மேட்டுப்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் மற்றும் நகராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 20 பேர் மீது பொய் புகார் கொடுத்த மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி ஊழியர்களைக் கண்டித்தும், அப்புகாரை தீர விசாரிக்காமல் உடனடியாக பொய் வழக்கு பதிந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினரைக் கண்டித்தும், அதிமுக சார்பில் மேட்டுப்பாளையத்தில் விரைவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்