தேரோடும் வீதியில் தினம் தினம் போராடும் மக்கள் - சுவாமிமலையில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்!

By செய்திப்பிரிவு

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம் சுவாமிமலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சுவாமிமலையில் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் வீதிகள், வடம் போக்கித் தெருக்களில் குடியிருப்புகள், ஹோட்டல்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள் ஏராளமாக உள்ளன.

இந்த கோயிலுக்கு விசேஷ நாட்கள் மட்டுமின்றி, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் சுவாமிமலையில் காலை முதல் இரவு வரை பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும்.

இந்நிலையில், தை மாதம் பிறந்ததையொட்டி, இங்குள்ள திருமண மண்டபங்கள், கோயில்களில் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திருமண நிகழ்வுக்கு வருவோர் தங்களது வாகனங்களை தேரோடும் வீதிகளிலேயே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால், தேரோடும் வீதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோயிலுக்கு செல்வோர், திருமண நிகழ்வுக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம், சுவாமிமலையில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்து, இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக சுவாமிமலையைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது: இந்தக் கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வரும்போது, பேரூராட்சி சார்பில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் சுவாமிமலை கோயில் நிர்வாகம் சார்பில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வாகனங்கள் நிறுத்தவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

கோயிலுக்கு வாகனத்தில் வருவோர் இரண்டு முறை கட்டணம் செலுத்துவதை தவிர்க்க, தேரோடும் வீதிகளிலேயே தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் சுவாமிமலையில் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக, பக்தர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் என பலரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றனர்.

இதுதொடர்பாக பேரூராட்சித் தலைவர் வைஜெயந்தி கூறியது: சுவாமிமலை வீதிகளில் வாகனங்களை நிறுத்தாதவாறு நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சி சார்பில் நோ பார்க்கிங் போர்டு வைத்திருந்தாலும், அதை பொருட்படுத்தாமல், பக்தர்கள் வாகனத்தை நிறுத்தி விட்டுச் சென்று விடுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தினால்தான், இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE