வேங்கைவயலில் பாதிக்கப்பட்டோரை குறிவைக்கிறதா அரசு? - பாமக சாடலும், விசிக பார்வையும்

By நிவேதா தனிமொழி

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் இருக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டது. இதனால், அதைப் பல நாள் குடித்த மக்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இந்த நிகழ்வு தொடர்பாகக் கடந்த ஆண்டு 2022 டிசம்பர் மாதம் வழக்குப் பதியப்பட்டது. ஓராண்டு கடந்த பின்பும் குற்றவாளி யார் என்பது இன்னும் கண்டறியப்படாமல் இருக்கிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் 31 பேரின் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் தடய அறிவியல் ஆய்வகத்தில் பெறப்பட்டு சிபிசிஐடி தரப்பு வெளியிட்டது. அதில் 31 பேரின் டிஎன்ஏவும், ஏற்கெனவே குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மனிதக் கழிவு மாதிரியின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ், “வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரிடம் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனை தோல்வி அடைந்துள்ளதால், விசாரணை எந்த இடத்தில் தொடங்கியதோ, அதே இடத்துக்கு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸார் குற்றமிழைத்தவர்களை விடுத்து, பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதால்தான், அது தோல்வி அடைந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே, இந்த சோதனை எடுக்கப்பட்டதிலிருந்து பல செயல்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். குறிப்பாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு டிஎன்ஏ சோதனை எதற்கு என கேள்வி எழுந்தது. குற்றவாளியை விட்டு விட்டு பாதிக்கப்பட்டவர்களைக் குறிவைப்பது ஏன் என்னும் கேள்வியும் முன்வைக்கப்பட்டது. இதை உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கிறது இந்த ஆய்வு முடிவு.

இது குறித்து பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், “தமிழகத்தில் பட்டியலின மக்கள் மீது சிலருக்கு திடீரென பாசம் வந்துள்ளது. ஆனால், அது உண்மை அல்ல. அப்படி பட்டியலின மக்களுக்கு சாதகமாக பேசும் பலரின் ஊர்களிலும் உள்ள கோயில்களில் பட்டியல் இன மக்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோல், இந்த விவகாரத்தில் திமுக கூட்டணியில் விசிக இருப்பதை விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் வன்கொடுமை பற்றி எங்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை. திமுக சாதிய எதிர்ப்பு, சமூக நீதியைப் பேசுகின்ற கட்சி. அதனால்தான் உதயநிதி பன்றிக் குட்டியை தன் கையில் வைத்துக் கொண்டு படம் நடித்தார். இதற்கு முன்பு எந்த கதாநாயகனும் அவ்வாறு செய்ததில்லை. இது வெறும் படத்துக்காகவோ பிரபலமடைய வேண்டும் என்பதற்காக செய்ததில்லை. அதில் கொள்கை இருக்கிறது. ஆனால், கொள்கைக்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வேறுபாட்டால்தான் இந்த விவகாரத்தில் திமுகவால் தீர்வு எட்டப்பட முடியவில்லை” என்றார்.

’சமூக நீதி’ மற்றும் ’சமத்துவ’ கருத்துகளை மேடைதோறும் திமுக பேசுகிறது. ஆனால், நடைமுறையில் அதை செயல்படுத்துவதில் சிக்கல் எழுகிறது என்பதைக் கூட்டணி கட்சிகள் முன்வைக்கும் கருத்தாக இருக்கிறது. தொடர்ந்து தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு எதிராக நடக்கும் திமுக அரசு கையாளும் விதம் விமர்சனமாகி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE