மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 127 ஆவது பிறந்தநாள் விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, நேதாஜிக்கு பெருமை சேர்க்கிறோம் என்ற பெயரில், மாவீரர் நேதாஜியின் வரலாற்றையே சிறுமைப்படுத்தி பேசியிருக்கிறார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 1942 இல் மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம், பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிட்டதால்தான் ஆங்கிலேயர்கள் நாட்டுக்கு விடுதலை அளிக்கின்ற நெருக்கடிக்கு உள்ளானார்கள் என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் தியாக சரித்திரம், மாவீரர் நேதாஜி நடத்திய ஆயுதம் தாங்கிய போராட்டம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு எவ்வித வரலாற்று அறிவும் இல்லை என்பதை அவருடைய உரை வெளிப்படுத்தி இருக்கிறது. இந்திய தேசிய ராணுவத்திற்கு ஜெர்மனியில் ஆதரவு திரட்டும் முயற்சியில் நேதாஜி ஈடுபட்டிருந்தபொழுது, ஹிட்லருக்கு அடுத்த தலைவரான கோயரிங் “மகாத்மா காந்தி பிரிட்டிஷாருக்கு எதிரான கருத்து கொண்ட போல்ஷ்விக் கையாள்” என்று குற்றம் சாட்டிய போது நேதாஜி கடும் கண்டனம் தெரிவித்தார்.

நேதாஜி ஜெர்மனியில் இருந்தபோது “Everybody loves music” என்ற திரைப்படத்தில் மகாத்மா காந்தியை இழிவுபடுத்தி ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருந்தபோது மிகக் கடுமையாக கண்டித்து, ஆர்ச் பிஷப் கார்டினல் இன்டிசியா என்பவரை சந்தித்து அந்த திரைப்படத்திற்கு தடை விதிக்குமாறு வற்புறுத்தினார். அதன்படி அப்படத்திற்கு ஜெர்மனியில் தடை விதிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை கட்டி எழுப்பிப் போர் பிரகடனம் செய்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், தாம் உருவாக்கிய படைப்பிரிவுகளுக்கு காந்தி ரெஜிமெண்ட் , நேரு ரெஜிமெண்ட், ஆசாத் ரெஜிமெண்ட் என்று பெயர்களை சூட்டினார். இந்திய தேசிய ராணுவம், ஐ.என்.ஏ போர்முனையில் நின்ற போது, 1944 செப்டம்பர் 22ஆம் நாள் மாவீரர் நேதாஜி வீரமுழக்கமிட்ட உரையில் “தேசப்பிதாவே! மகாத்மாவே! இந்தியாவின் விடுதலைக்கான இந்த புனிதப் போரில் எங்களுக்கு உங்களின் மேலான ஆசியை தாருங்கள்; வாழ்த்துக்களை வழங்குங்கள்” என்று மானசீகமாக மகாத்மா காந்திக்கு வேண்டுகோள் வைத்து ஆற்றிய உரை நெஞ்சத்தை நெக்குருக செய்யும் உணர்ச்சியின் வெளிப்பாடு.

இந்த வரலாறு எல்லாம் ஆர்எஸ்எஸ் தொட்டிலில் வளர்ந்த ஆர்.என். ரவி-க்கு தெரிய வாய்ப்பில்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தில் எள் முனை அளவு கூட பங்கேற்காத இந்துத்துவ தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை பெருமிதத்துடன் பறைசாற்றும் ஆர்.என்.ரவியிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆர்.எஸ்.எஸ்- இன் பிரச்சாரகராக ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு தேசப்பிதா மகாத்மா காந்தியை இழிவு படுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்