பன்னாட்டு மருத்துவ மாநாட்டின் நிகழ்வுகளை ஆவணமாக தொகுத்து மத்திய, மாநில சுகாதார துறைக்கு அனுப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: பன்னாட்டு மருத்துவ மாநாட்டின் உரைகள், கட்டுரைகள் புத்தகங்களாகவும், ஆவணங்களாகவும் தொகுக்கப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

மருத்துவ உலகமே வியந்து பார்க்கும் வகையில் இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் கடந்த 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ‘மருத்துவத்தின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மாநாடு மிகப்பெரிய வெற்றியைக் கண்டுள்ளது. தமிழகம் முழுவதும் 738 கல்லூரிகள் (மருத்துவம், செவிலியர், பிசியோதெரபி) தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்த மாணவர்கள் தங்களின் தரத்தினை மேம்படுத்திக் கொள்வதற்கும், ஆராய்ச்சித் திறனை அதிகரிப்பதற்கும் இந்த மாநாடு நடத்தப்பட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், கத்தார், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய 7 நாடுகளில் இருந்து 28 மருத்துவ நிபுணர்கள் உரை நிகழ்த்துவதற்கும், ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கும் இந்த மாநாட்டுக்கு வந்துள்ளனர். இந்தியா முழுவதிலும் இருந்து 185 மருத்துவ நிபுணர்கள் நேரடியாகவும், 12 பேர் காணொலி மூலமாகவும் உரை நிகழ்த்தியுள்ளனர்.

இந்த மாநாட்டுக்காக பல்வேறு மருத்துவ மாணவர்கள், விரிவுரையாளர்கள் சமர்ப்பித்த 625-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுப்புகளும், பல்வேறு நாடுகளின் மருத்துவ வல்லுநர்களின் ஆராய்ச்சிக் குறிப்புகளும் தொகுக்கப்பட்டு, புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம் போன்ற 27 மருத்துவ பிரிவின் கீழ் விவாதங்கள் நடத்தப்பட்டன.

இந்த மாநாடு வெற்றிபெற பலருடைய உழைப்பு காரணமாக இருந்துள்ளது. இம்மாநாட்டில் ஆற்றப்பட்ட உரைகள், சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ஆகியவற்றை புத்தகங்களாகவும், ஆவணங்களாகவும், காணொலி காட்சிகளாகவும் தனித்தனியே தயார் செய்து, ஒட்டுமொத்தமாக சுகாதாரத் துறை பயன்பெறும் வகையில் மத்திய சுகாதாரத் துறைக்கும், மற்ற மாநில சுகாதாரத் துறைக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மாநாட்டுக்கு மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டின் வெற்றி என்பது ஒட்டுமொத்தமாக சுகாதாரத் துறைக்கு ஒரு பயனுள்ள வெற்றியாக அமைய வேண்டும் என்கிற வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது, சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி, பதிவாளர் அஸ்வந்த் நாராயணன், மருத்துவர் மது புருஷோத்தமன், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் ஜெ.சங்குமணி, கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE