சித்த மருத்துவ கல்லூரியில் ரூ.5 கோடியில் கட்டமைப்பு வசதி

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடியில் அமைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை 110 படுக்கை வசதிகளுடன் 1970-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

இது தற்போது சித்தா, வர்மா, ஆயுர்வேதா மற்றும் யுனானி ஆகிய மருத்துவ சிகிச்சைகளுக்கு 310 படுக்கை வசதிகள் கொண்டுள்ளது. இம் மருத்துவமனை இந்தியமருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் இசைவு பெற்ற தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.

இக்கல்லூரியில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட சித்த மருத்துவ பட்டப்படிப்பு, 3 ஆண்டுகள் கொண்ட பட்டமேற்படிப்பு பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் பொது மருத்துவம், குணப்பாடம், நோய்நாடல், குழந்தை மருத்துவம், புற மருத்துவம், வர்மம் மருத்துவம் மற்றும் யோக மருத்துவம் என 7 துறைகள் உள்ளன. இக்கல்லூரியில் அமைந்துள்ள பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கான விடுதிகளில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

2023-24 ஆண்டுக்கான சுகாதாரத் துறை மாநில நிதி அறிக்கை அறிவிப்பின்படி, சென்னை அரசினர் சித்த மருத்துவக்கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவிகளுக்கான விடுதிக்கு ரூ.2.59கோடி மதிப்பீட்டில் கூடுதல் தளத்துக்கான கட்டுமானப் பணிகள், பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கல்விசார் பயிற்சி கூடத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் தளத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளது.

மேலும், அரசினர் யுனானி மருத்துவக் கல்லூரியில் மாணவிகளுக்கான விடுதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE