சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கு: திமுக எம்.பி. கவுதம சிகாமணி நீதிமன்றத்தில் ஆஜர்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கவுதம் சிகாமணி சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். கடந்த 2006 -11 திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் கே.எஸ்.ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜமகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ்.பிஸினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதன் நகல்கள் கடந்தாண்டு நவ.24-ல் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலண்டினா முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகை ஆவணங்களில் சில பக்கங்கள் தெளிவில்லாமல் இருப்பதாக அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையடுத்து அதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் பிப்.13-க்கு தள்ளிவைத்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE