கோயிலுக்கு தானம் தந்த நிலத்தை அழித்தால் பசுவைக் கொன்ற பாவம் வரும்: 16-ம் நூற்றாண்டு கல்வெட்டில் தகவல்

By எஸ்.முஹம்மது ராஃபி

 

'கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் நிலத்தை அழிப்பவருக்கு, பசுக்களைக் கொன்ற பாவம் கிடைக்கும்' என்று, கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கள்ளிக்குடியில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் உள்ளது

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் திருவாடானை அருகில் கள்ளிக்குடி சீனிவாசப்பெருமாள் கோயிலின் நுழைவாயிலில் உள்ள கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டைக் கண்டுபிடித்து படியெடுத்துள்ளனர்.

இந்த கல்வெட்டு குறித்து தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது:

கல்வெட்டுசெய்தி

அரும்பொற்கூற்றத்து கள்ளிக்குடியில் இருக்கும் தீக்கொல்லர் சொக்கர் ஆண்டார் என்பவர், பெருமாள் கோயில் எதிரில் உள்ள குளத்தை, தானமாக வெட்டிக் கொடுத்துள்ளார். தீக்கொல்லர் என்பது இரும்புக் கொல்லராக இருக்கலாம். திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீசீவல்லத்தேவர் எனும் பாண்டிய மன்னரின் 27-வது ஆட்சியாண்டில் சார்வரி வருஷம் பங்குனி 1 அன்று இந்த தானம் வழங்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் உள்ள தமிழ் ஆண்டு மற்றும் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் கி.பி.1541 என்பதைக் கணிக்க முடிகிறது.

தானத்திற்குஅழிவுசெய்தால்...

கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தானத்திற்கு யாராவது அழிவு செய்தால் அவர்கள் கங்கைக்கரையிலும் சேதுக்கரையிலும் காராம்பசுவைக் கொன்ற பாவம் எய்துவார்கள் என்றும் திருக்கோயில்களில் திருட்டுப் பாவம் எய்துவார்கள் என்றும் இந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.

தானத்திற்கு அழிவு செய்தால் அவர்களுக்கு எவ்வித பாவம் ஏற்படும் என்பதைக் குறிப்பிடும் கல்வெட்டுப் பகுதி ஓம்படைக் கிளவி என்பதாகும். விஜய நகர, நாயக்கர் காலக் கல்வெட்டு அமைப்பில் இது இருக்கிறது. கூடுதலாக சேதுக்கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவமும் சொல்லப்பட்டுள்ளது. திருப்புல்லாணி அருகில் உள்ள சேதுக்கரை கங்கைக்கரைக்கு இணையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வூரைச் சேர்ந்த கண்ணாளரான பெரிய நாயன் குலசேகரக் கொல்லன் என்பவர் அரசாங்க அதிகாரியான முதலிகள் சொல்லியபடி, இதை எழுதிக் கையெழுத்திட்டுள்ளார்.

ராமநாதபுரம்பாண்டியர்

மன்னரின் 27-வது ஆட்சியாண்டில் தானம் வழங்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதன்மூலம் இவர் 27 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்துள்ளார் எனத் தெரிகிறது. மேலும் மதுரையை பாண்டியர்களிடமிருந்து டில்லி சுல்தான்கள் கைப்பற்றியபின் பாண்டியர்களின் ஆட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை அல்லது காளையார்கோயில் பகுதியை தலைமை இடமாகக் கொண்டு ஆட்சி செய்திருக்கலாம் என்பதற்கும் இந்தக் கல்வெட்டு சான்றாக உள்ளது, என்றார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்