“கோயில்களில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் அமைச்சர் சேகர்பாபு” - எச்.ராஜா குற்றச்சாட்டு @ மதுரை 

By கி.மகாராஜன் 


மதுரை: “தமிழக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கோயில்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்” என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது: "அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டை நடைபெற்றுள்ளது. இதனால் ராம ஜென்ம பூமி 500 ஆண்டு பிரச்சினைக்கு இறுதி தீர்வு காணப்பட்டுள்ளது. ராமர் பிராண பிரதிஷ்டையை உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் உணர்வுபூர்வமாக கண்டுகளித்தனர். தமிழக ராவண பக்தர்கள், ராமர் கோயில் ஒளிபரப்புக்கு தடை விதித்தனர்.

தமிழக அறநிலையத் துறையில் கொள்ளை நடைபெறுகிறது. 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளில் அறநிலையத் துறையில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளை அடித்துள்ளனர். அறநிலையத் துறையினர் கொடூரமானவர்கள். சேகர்பாபு கட்டப்பஞ்சாயத்து செய்தவர். அவர் அறநிலையத் துறை அமைச்சராக கோயில்களில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.

தமிழக அரசு ராமருக்கு எதிராக சட்டவிரோதமாக இந்து விரோதிகளாக நடந்து கொண்டது. இருப்பினும் தமிழக மக்கள் மிரட்டலுக்கு அஞ்சாமல் பல்லாயிரக்கணக்கான இடங்களில் ராமர் பிரதிஷ்டையை பார்த்துள்ளனர். திமுகவின் இந்து விரோத போக்கால் எதிர்கட்சிகளின் ஆளும் மாநிலங்கள் குறைந்து வருகிறது. இப்போது ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். திமுக எம்பிக்கள் எண்ணிக்கை கணிசமாக குறையும்” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE