குடியரசு தின நிகழ்வுக்கான ஆளுநர் ரவியின் அழைப்பை நிராகரிப்பதாக இந்திய கம்யூ. அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தேசத் தந்தையைப் பற்றி அவதூறு பரப்பும் ஆளுநரின் மலிவான போக்கால் குடியரசு தின நிகழ்வு அழைப்பை நிராகரிக்கிறோம் என்று இந்தியக் கம்யூ.கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை மறுநாள் (26.01.2024) நடைபெறும் குடியரசு தின நிகழ்வில் பங்கேற்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநர் மாளிகை அழைப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆனால், அதேசமயம் நாட்டின் விடுதலை போராட்ட வரலாற்றை புரட்டி பேசுவதும், அறிஞர் உலகம் ஒரு ஆயிரம் ஆண்டில் மனித சமூகம் கண்டறிந்த பேரறிவாளர் காரல் மார்க்ஸ் என்று ஏற்றுக் கொண்ட நிலையில் அவரை சிறுமைப்படுத்தி பேசுவதும், நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் தலைமை சாரதியாக திகழ்ந்து, தேசத் தந்தை என ஏற்றுக் கொள்ளப்பட்ட மகாத்மா காந்தி குறித்து அவதூறு பரப்புவதுமான மலிவாக செயல்படும் ஆர்.என்.ரவியின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.

இதனால், அவரது அழைப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் வழக்கம் போல குடியரசு தின நிகழ்வுகள் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE