அயோத்தி ராமர் கோயிலில் முதலில் தரிசித்தது மகிழ்ச்சி: ரஜினிகாந்த் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: அயோத்தி ராமர் கோயில் திறந்ததும் முதலில் தரிசனம் செய்த சிலரில் நானும் ஒருவன் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலில் பால ராமர் சிலை நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். அயோத்தியில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இனி ஒவ்வொரு ஆண்டும் ராமர் கோயிலுக்கு வருவேன் என்று அயோத்தியில் செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில், அயோத்தியில் இருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அயோத்தியில் ராமர் கோயில் திறந்ததும் முதலில் பார்த்த 150-200 நபர்களில் நானும் ஒருவன் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பான முறையில் தரிசனம் கிடைத்தது. இது வரலாற்று நிகழ்வா, அரசியல் நிகழ்வா என்று கேட்கிறீர்கள். என்னை பொருத்தவரை இது ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுதான்.

நாடு முழுவதும் ஒற்றுமையுடன் பயணிக்க வேண்டிய சூழலில் இது மத அரசியலை முன்னிறுத்தும் நிகழ்வு என்று விமர்சனங்கள் வருவதாக கூறுகிறீர்கள். ஒவ்வொருவர் பார்வை ஒவ்வொரு மாதிரி இருக்கும். எல்லோர் பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அது அவரவர் சொந்த கருத்து. என் பார்வையில் இது ஆன்மிகம். அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE