வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவு ஒத்துப்போகவில்லை - சிபிசிஐடி போலீஸ் தகவல்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை/சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 31 பேரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் ஒத்துப்போகவில்லை என்று சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வேங்கைவயல், முத்துக்காடு, இறையூர், காவேரி நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 31 பேர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் நடைபெற்ற பரிசோதனையில் 31 பேரின் டிஎன்ஏவும், ஏற்கெனவே குடிநீர் தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மனிதக் கழிவு மாதிரியின் டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என்று தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி எஸ்.பி. தில்லை நடராஜன் தெரிவித்துள்ளார்.

போலீஸார் குழப்பம்: இந்த வழக்கைப் பொறுத்தவரை நேரடி சாட்சிகள் யாரும் இல்லாததால், பிரதானமாக நம்பியிருந்த டிஎன்ஏ சோதனையின் முடிவு விசாரணைக்கு பின்னடைவைத் தந்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 31 பேரில், 10 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த சிபிசிஐடி போலீஸார் ஏற்கெனவே சம்மன் அனுப்பினர். ஆனால்,இதற்கு 10 பேரும் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், சிபிசிஐடி போலீஸார் குழப்பமடைந்துள்ளனர்.

சிபிஐ விசாரணை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேங்கைவயல் விவகாரத்தில் 31 பேரிடம் நடத்தப்பட்ட டிஎன்ஏ சோதனை தோல்வி அடைந்துள்ளதால், விசாரணை எந்த இடத்தில் தொடங்கியதோ, அதே இடத்துக்கு மீண்டும் திரும்பிச் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் போலீஸார் குற்றமிழைத்தவர்களை விடுத்து, பாதிக்கப்பட்டவர்களை மையமாக வைத்து விசாரணை நடத்தப்பட்டதால்தான், அது தோல்வி அடைந்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தர என்ன செய்யப் போகிறது என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE