காமராஜர் பல்கலை. விடைத்தாள்களை ஆன்லைன் பதிவேற்றுவதில் கட்டண முறைகேடு? - உயர்கல்வி செயலரிடம் புகார்

By என்.சன்னாசி

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 116 கல்லூரிகள், 90க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பாடப்பிரிவுகள் மூலம் செமஸ்டர் முறையில் தேர்வு எழுதும் இளநிலை, முதுநிலை மாணவ, மாணவிகளுக்கான விடைத்தாள்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்து, திருத்தம் செய்யும் திட்டத்தை பல்கலை நிர்வாகம் அறிமுகம் செய்தது. இத்திட்டம் மூலம் விடைத்தாள்களை முழுமையாக ஆன்லைனின் பதிவேற்றம் செய்து, சம்பந்தப்பட்ட விடைத்தாள் திருத்தும் ஆசிரியருக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி வாய்ப்பளிக்கப்படும். ஒருவர் முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு வாய்ப்பளிக்கப்படும். இதற்கு பல்கலை. சிண்டிகேட் குழுவில் முறையாக ஒப்புதல் பெறப்பட்டு அமல்படுத்தப்பட்டது. செமஸ்டர் தேர்வுக்கான விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தும் திட்டம் கடந்த ஏப்ரல் தேர்வில் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில், 2023-24ம் கல்வியாண்டுக்கான இளங்கலை, இளம் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான சுமார் 1.20 லட்சம் விடைத்தாள்களும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை, முதுநிலை பாடப்பிரிவுக்கான விடைத்தாள்களும் ஆன்லைனின் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில், திருத்தும் பணி தொடங்குவதற்கு முன்பே பிரச்னை எழுந்துள்ளது. இத்திட்டத்துக்கு முறையான டெண்டர் இன்றி, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு கட்டணம் வழங்குவதாக பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கை குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அந்த நிறுவனத்திற்கான கட்டணத்தை வழங்குவதிலும், விடைத்தாள் திருத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காமராசர் பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில், தமிழக உயர் கல்வித்துறை செயலர் மற்றும் துணைவேந்தர், பதிவாளருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் கூறுகையில், ‘‘ஏற்கனவே சிண்டிக்கேட் கூட்டத்தில் இத்திட்டம் முன்மாதிரியாக கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், ஏப்ரல் தேர்வுக்கான விடைத்தாள்களை ஆன்லைனில் திருத்தியதில் முறையாக டெண்டர் இன்றி சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்திற்கு மேல் வெளி நிறுவனத்திற்கு பல்கலைக்கழகம் கட்டணம் வழங்க வேண்டுமெனில் சிண்டிகேட், நிதிக் குழுவில் ஒப்புதல் வாங்கி டெண்டர் விட வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றவில்லை. இத்திட்டத்தில் முறைகேடுக்கு வாய்ப்பு உள்ளது. இவ்விவகாரத்தில் தேர்வுத்துறையினரிடம் முறையாக விசாரிக்க வேண்டும் என உயர்கல்வி செயலருக்கு புகார் அனுப்பியுள்ளோம்" என்றனர்.

துணைவேந்தர் ஜெ. குமார் கூறுகையில், ‘‘இத்திட்டத்தால் துரிதமாக ரிசல்ட் வெளியிடப்படும். விடைத்தாள்களை முறையாக பாதுகாக்க முடியும். காணவில்லை என்ற சிக்கல் இருக்காது. கடந்த செமஸ்டரில் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. நவம்பர் செமஸ்டரில் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யப்பட்டதில் கட்டணம் வழங்குவதில் சில இடர்பாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் ஓரிரு நாளில் சரியாகிவிடும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE