ஶ்ரீவில்லிபுத்தூர் | இடியும் நிலையிலுள்ள அங்கன்வாடி கட்டிடத்தில் பயிலும் குழந்தைகள் - சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் கல்வி பயின்று வருவதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மடவார் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தற்போது அங்கன்வாடி மையத்தின் சமையல் கூடத்தில் கான்கிரீட் மேற்கூரையும், வகுப்பறையில் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையும் உள்ளது. சமயலறை கட்டிடத்தின் மேல் இரு ஆலமரங்கள் வளர்ந்துள்ளது. மரத்தின் வேர்கள் சுவரில் வளர்ந்து, வகுப்பறையின் கரும்பலகை மற்றும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது.

இதனால் லேசான மழை பெய்தாலே அங்கன்வாடி மையதிற்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. அதேபோல் சமையல் அறையின் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து உள்ளது. இதனால் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், 'அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையில் செடி முளைத்த போதே அகற்றி இருந்தால், கட்டடத்திற்கு சேதம் ஏற்பட்டு இருக்காது. ஆனால் இப்போது செடி மரமாக வளர்ந்து விட்டது. இதனால் கட்டிடத்தின் சிசிமெண்ட் ண்ட் பூச்சுகள் சிறிது சிறிதாக பெயர்ந்து வருகிறது. அங்கன்வாடி மையத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நகராட்சியில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் பல பெற்றோர்கள் பயந்து தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்புவதில்லை. அங்கன்வாடி மையத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE