குமரி நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கு | தேவாலய வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் தடை

By கி.மகாராஜன் 


மதுரை: குமரி மாவட்டம் மயிலோடு தேவாலயத்தில் கொலையானவர் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யக்கூடாது, கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜோஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மயிலோடு பகுதியில் செயின்ட் மைக்கேல் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையுடன் உள்ளனர். சேவியர் குமார் என்பவர் ஆலயத்தில் தேவையற்ற பிரச்சனைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்தார். இதனால் அவரை ஜன. 20ல் கிராம மக்கள் தாக்கினர். இதில் சேவியர்குமார் உயிரிழந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராஜா என்பவர் சேவியர்குமாரின் உடலை தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என பிரச்சினை செய்து வருகிறார். சேவியர்குமாரின் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இதனால் சேவியர்குமாரின் உடலை கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும்." இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தேவாலயத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் மக்கள் எப்படி மன நிம்மதியுடன் பிரார்த்தனை செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

அரசு தரப்பில், இறந்தவரின் உடலை எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் விரும்புகிறார்களோ, அங்கு அடக்கம் செய்யலாம் என தேவாலயம் சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில், கிறிஸ்தவ தேவாலயத்தில் கல்லறைத் தோட்டம் இல்லை. அங்கு புதிதாக உடல் அடக்கம் செய்யப்பட்டால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படும். கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான பொது கல்லறை தோட்டம் உள்ளது. அங்கு தாராளமாக அடக்கம் செய்ய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, தேவாலயத்துக்கு சொந்தமான பொது கல்லறை தோட்டத்தில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வேண்டும். உடல் அடக்கத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதைமீறி யாராவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தினால் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்கலாம். வழக்கு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE