அமைச்சராக தொடர்கிறாரா பொன்முடி? - சட்டம் சொல்வதும் நடைமுறையும்

By நிவேதா தனிமொழி

பொன்முடியா? அமைச்சர் பொன்முடியா? அமைச்சர் பொன்முடி தொடர்வதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசு தரப்பு விளக்கம் என்ன? - இதோ ஒரு விரைவுப் பார்வை.

தமிழகத்தின் முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, கடந்த 2006-2011 காலகட்டத்தில் திமுக ஆட்சியின்போது உயர் கல்வி மற்றும் கனிமவளத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் வழக்குப் பதியப்பட்டது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 21-ம் தேதி ’3 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் அபராதம்’ விதித்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதையடுத்து, அவருக்கும் அவரது மனைவிக்கு சரணவடைதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். இந்த நிலையில், அவர் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ பதவி சட்ட ரீதியாகப் பறிபோயிருக்க வேண்டும். இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், பொன்முடி கலந்துகொள்ளவில்லை. ஆனால், இன்றளவும் அரசு இணையதளத்தில் அவர் இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதாகப் பதிவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவர், அமைச்சர் பதவியில் தொடர்வது சட்டப்படி செல்லுமா என்னும் கேள்வியை வழக்கறிஞர் நல்லதுரையிடம் முன்வைத்தோம். அவர், “பொன்முடி அமைச்சராகவோ, எம்.எல்.ஏ.வாகவோ தொடர்வதற்கு சட்டப்படி எந்த முகாந்திரமும் இல்லை. அவரை குற்றவாளி என அறிவித்த அடுத்த நொடியே அவர் பதவியை இழந்துவிட்டார்.

தற்போது, உச்ச நீதிமன்றமும் சரணடைவதிலிருந்து விலக்கு அளித்திருக்கிறதே தவிர, அவரது தண்டனைக்குத் தடை விதிக்கவில்லை.ஒருவேளை, அவர் அந்தத் தீர்ப்புக்கு ’ஸ்டே’ வாங்கினாலும் அவர் பதவியில் நீடிக்க முடியாது” என்றார்.

இது குறித்து சட்டசபை செயலாளர் சீனிவாசனிடம் பேசினோம். அவர், "உயர் நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பின் நகல் எங்களுக்கு அதிகாரபூர்வமாக வந்த பின்பு அவரை நீக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அதையும் முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கிறது”என்றார். எனவே, அரசின் தகவல் படி, இப்போது வரை பொன்முடி ‘அமைச்சர் பொன்முடி’யாகவே தொடர்கிறார் என்பது தெளிவாகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE