அதிமுகவில் இணைந்த உசிலம்பட்டி ஆளும் கட்சி நகராட்சித் தலைவர் - மதுரை திமுக நிர்வாகிகள் அதிர்ச்சி 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற உசிலம்பட்டியில் திமுக நகராட்சி தலைவர் திடீரென்று அதிமுகவில் அக்கட்சி பொதுச் செயலாளர் கே.பழனிசாமி முன்னிலையில் சேர்ந்தார். மக்களவைத் தேர்தல் நேரத்தில் நடந்துள்ள இச்சம்பவம், மதுரை மாவட்ட திமுகவினரையும், அக்கட்சி மேலிடத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஆளும் திமுகவும், எதிர்கட்சியான அதிமுகவும் சமபலத்திலே உள்ளன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக, பல அணிகளாக பிரிந்த நிலையில் தற்போது கட்சி கே.பழனிசாமிக்கு சென்று அவர் பொதுச் செயலாளரான பிறகு மதுரை மாவட்ட பெரும்பாலான நிர்வாகிகள், தொண்டர்கள் இவரது அணியிலே நீடிக்கின்றனர். அதனால், அமமுக, ஓபிஎஸ் அணியில் இருந்து நிர்வாகிகள் ஒருவன் பின் ஒருவராக அதிமுகவில் சேர்ந்து வருகின்றனர். உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏவும், அமமுக மாவட்டச் செயலாளருமான இ.மகேந்திரன், அதிமுகவில் சேர்ந்தார். இவர் டிடிவி.தினகரருக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் குறிப்பிடத்தக்கது.

அதிமுக அணிகளில் இருந்து நிர்வாகிகள் இருந்து கே.பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டு அவரது அணியில் சேர்ந்து வரும் நிலையில் இன்று திடீரென்று மதுரை மாவட்டத்தில் அரசியல் முக்கியத்துவம் பெற்ற உசிலம்பட்டியில் ஆளும் கட்சியான திமுக நகராட்சித் தலைவராக உள்ள திமுக நகர மன்ற தலைவர் சகுந்தலா கட்டபொம்மன், அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.

மக்களவைத் தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் திமுக நகராட்சி தலைவர் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்துள்ளது, மதுரை மாவட்ட திமுகவையும், அக்கட்சி மேலிடத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திமுக மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், முன்னாள் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சோலை ரவி உள்ளிட்ட பலர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுகவில் சேர்ந்தவர்கள், கே.பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், வெற்றிலை மாலை அணிவித்தனர்.

உசிலம்பட்டி திமுக நகராட்சி தலைவர், அவருடன் அக்கட்சியினர் அதிமுகவில் சேருவதற்கு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் முக்கிய பின்புலமாக செயல்பட்டுள்ளார்.

உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஆக இருந்த ஐய்யப்பன், ஓபிஎஸ் அணியில் இணைந்தபிறகு அதிமுக அப்பகுதியில் பலவீனமாக கருதப்பட்டது. அந்த பலவீனத்தை ப்போக்கும் வகையில் அமமுக முக்கிய நிர்வாகி மகேந்திரன், அதனை தொடர்ந்து தற்போது திமுக நகராட்சித்தலைவர் போன்ற முக்கிய நபர்களை அதிமுக வளைத்துப்போட்டுள்ளது, மக்களவைத் தேர்தலுக்காக அக்கட்சி தீவிரமாக தயாராகி வருதை காட்டுகிறது.

புதிய நிர்வாகிகள் இணைப்பு நிகழ்ச்சியில் முன்னாள் உறுப்பினர்கள் இ.மகேந்திரன், பா.நீதிபதி, கே. தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன், கே.மாணிக்கம், மாநில ஜெ., பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் நிர்மல் குமார், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமராஜா, ஒன்றிய செயலாளர் செல்லம்பட்டி ராஜா, உசிலை டாக்டர் விஜய் பாண்டியன் உட்பட பலர் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE