புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் புதன்கிழமை முதல் போட்டி - சிறந்த காளை, வீரருக்கு காருடன் ரூ.1 லட்சம் பரிசு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (புதன்கிழமை) திறந்து வைக்க உள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் வெற்றி பெறும் சிறந்த காளை, வீரருக்கு காருடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது.

மதுரை அருகே அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ரூ.64 கோடியில் கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா நாளை காலை நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைத்து, முதல்முறையாக இந்த மைதானத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்தப் போட்டி தமிழக அரசு சார்பில் நடக்கும் நிலையில், வெற்றிபெறும் வீரர், காளைகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த காளைகள் தேர்வு செய்யப்பட்டு அதில் முதலிடம் பிடிக்கும் காளைக்கு கார் பரிசுடன் ஒரு லட்ச ரூபாய், அதிக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரருக்கு காருடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது. ரொக்கப் பரிசுகள் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. கார்களை முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் வழங்க உள்ளனர்.

அதுபோல், இரண்டாமிடம் பிடிக்கும் காளைக்கு ரூ.75 ஆயிரம், மூன்றாமிடம் பிடிக்கும் காளைக்கு ரூ.50 ஆயிரம் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. இரண்டாமிடம் பிடிக்கும் வீரருக்கு ரூ. 75 ஆயிரம் ரூபாயும் மூன்றாமிடம் வீரருக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் அரசு தரப்பில் வழங்கப்படும் என ஆட்சியர் சங்கீதா தகவல் தெரிவித்துள்ளார். இது தவிர ஒவ்வொரு முறையும், வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகளை அடக்கும் வீரருக்கு, அடங்கா காளைக்கும் மற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை போல் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE