மேலூர் பகுதிக்கு 120 நாள் தண்ணீர் திறக்க கோரி வழக்கு: வைகை அணை நீர் இருப்பை தெரிவிக்க உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரை மேலூர் பகுதி விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் திறக்கக் கோரிய வழக்கில் வைகை அணையின் தண்ணீர் இருப்பு குறித்த விவரத்தை தாக்கல் செய்ய பொதுப்பணித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மேலூர் பகுதியில் விவசாயம் அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் விவசாயத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது வைகை அணை. இந்த அணையிலிருந்து மேலூர் பகுதி விவசாயத்துக்கு 120 நாள் தண்ணீர் வழங்க வேண்டும். வைகை அணையில் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. இந்த கணக்குபடி 120 நாள் தண்ணீர் வழங்க முடியும்.

ஆனால் மேலூர் பகுதி விவசாயத்துக்கு 90 நாள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் 33 நாள் கடந்துவிட்டது. 120 நாள் தண்ணீர் தராவிட்டால் போதிய விளைச்சல் கிடைக்காது. விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்படும். அதிகாரிகள் தன்னிச்சையாக தண்ணீர் திறப்பை 120 நாளிலிருந்து 90 நாளாக குறைத்துள்ளனர். எனவே வைகை அணையிலிருந்து மேலூர் பகுதிக்கு 120 நாள் தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார். பின்னர் நீதிபதிகள், வைகை அணையில் நீர் இருப்பு எவ்வளவு? இன்னும் எத்தனை நாட்களுக்கு தண்ணீர் திறக்கலாம் என்பது குறித்து பொதுப்பணித்துறை நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE