கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுக்க பிப்.1-ல் பாமக சிறப்பு பொதுக்குழு

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கான பாமகவின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம், பிப்ரவரி 1-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலை பாமக சந்தித்தது. அதிமுகவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், 2022-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த 9 மாவட்டங்களுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது, கூட்டணியில் இருந்து விலகிய பாமக, தனித்துப் போட்டியிட்டது. அதன் பின் நடந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை. தற்போதைய நிலையில் எந்தக் கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பாமக அறிவித்துவிட்டது.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில், கூட்டணி தொடர்பான முடிவுகளை எடுப்பதற்காக பாமகவின் சிறப்பு பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பாமக-வின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம், வரும் பிப்ரவரி 1-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை அரங்கில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

கட்சியின் நிறுவனர் ராமதாஸ், முன்னிலையில் நடக்கும் இந்த பொதுக் குழுவில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலக பாமா மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், கட்சியின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் பங்கேற்க உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE