தேவாலய வளாகத்தில் நடந்த கொலை: தேடப்படும் யாரும் கைது செய்யப்படவில்லை - நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கிறிஸ்தவ ஆலய வளாகத்தில் நடந்த கொலையில் நீதி கேட்டும், போலீஸாரால் தேடப்படுவோர் யாரும் கைது செய்யாததை கண்டித்தும், இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவிலில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே மைலோட்டை சேர்ந்தவர் சேவியர் குமார் ( 45 ). இவர் கன்னியாகுமரி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் வேலை பார்த்து வந்தார். நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவராகவும் இருந்து வந்தார். இவர் மைலோடு மிக்கேல் அதிதூதர் ஆலய, பாதிரியார் இல்லத்தில் கடந்த 20-ம் தேதி மாலை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மயிலோட்டை சேர்ந்த தக்கலை ஒன்றிய திமுக செயலாளரும், இரணியல் அரசு வழக்கறிஞருமான ரமேஷ் பாபு, பாதிரியார்கள் ராபின்சன், பெனிட்டோ உட்பட 15 பேர் மீது இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர்களைத் தேடி வருகின்றனர். கேரளா மற்றும் சென்னையில் தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், யாரும் கைது செய்யப்படவில்லை. சேவியர் குமாரின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும், அதுவரை ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவரது உடலை வாங்கப் போவதில்லை எனக்கூறி, நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேவியர் குமாரின் மனைவி ஜெமினி, அவரது இரு பெண் குழந்தைகள் ஆகியோருடன், நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி குமரி மாவட்ட நிர்வாகிகள் பெல்பின்ஜோ, ரீகன் ரொனால்டு, ஹிம்லர், ஜெமிலா ஆஸ்லின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE