“அமலாக்கத் துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள்” - இளைஞரணி மாநாட்டில் உதயநிதி குற்றச்சாட்டு

By த.சக்திவேல்

சேலம்: அமலாக்கத் துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள் என்று திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஞாயிறு) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பி. கனிமொழி ஏற்றிவைத்தார். மாநாட்டில் திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை முன்மொழிய அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் பதவியை அகற்றிட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், துணைவேந்தர் பதவி முதல்வர் வசமே ஒப்படைக்கப்பட வேண்டும் ஆகியனவற்றை வலியுறுத்தி 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பிறந்தநாள், திருமண நாள் போல, மாநில மாநாடு நடைபெற்ற இந்த நாளை என்னால் மறக்க முடியாது. நீட் தேர்வினால் அனிதா உள்பட 22 குழந்தைகள் உயிரிழந்தனர். மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை கலைக்கும் நீட் ரத்து செய்ய வலியுறுத்தி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 85 லட்சம் கையெழுத்துகளை வாங்கியுள்ளோம். திமுக தலைவரின் அனுமதி கிடைத்தால், இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்துவோம்.

திமுக இளைஞரணி மாநில மாநாட்டினை, இந்தியா பார்த்துக் கொண்டுள்ளது. மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதை, முழு நேர வேலையாக மத்திய அரசு செய்து கொண்டுள்ளது. தமிழக மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் செலுத்தினால் 29 காசுகள் மட்டுமே மீண்டும் தமிழகத்துக்கு கிடைக்கிறது. 9 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வரி செலுத்தியதில் ரூ.2 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. இதனால் மழை வெள்ள பாதிப்பின் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

நம்முடைய மொழி, பண்பாட்டு உரிமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. மருத்துவக் கல்வி மட்டுமல்ல, அனைத்து கல்விக்கும் நுழைவுத் தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்துள்ளனர். 2 ஆயிரம் ஆண்டுகளாக முயன்றும் தமிழரின் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. இன்னும் 2 ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிக்க முடியாது. அமலாக்கத் துறை மூலம் திமுகவை மிரட்டுகிறார்கள். திமுக தலைவர்களை மட்டுமல்ல, தொண்டர் வீட்டு குழந்தையை கூட மிரட்ட முடியாது. திமுக நூற்றாண்டை கடந்துள்ளது. இன்னும் ஒரு நூற்றாண்டாவது நம்முடைய கட்சி களத்தில் நின்றால்தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்தும் கிடைக்கும். ஸ்டாலின் கைகாட்டுபவர்தான் அடுத்த பிரதமராக வர முடியும்.

திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, சாதி பாகுபாடற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்பது தான் கனவு என்றார். அந்த கனவை நனவாக்குவது தான் இளைஞரணியின் லட்சியம்.. அதனை நிறைவேற்ற வேண்டுமானால், இந்தியா முழுவதும காவிச் சாயம் பூச முயற்சிக்கும் பாஜக-வை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் முதல் பணி. அதற்கு, நாடாளுமன்றத் தேர்தலில், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இது இளைஞரணி அல்ல, கலைஞரணி" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE