'மத்திய அரசை கேள்வி கேட்டால் ‘ICE’ நம்மைத் தேடி வரும்' - சேலம் இளைஞரணி மாநாட்டில் கனிமொழி பேச்சு

By செய்திப்பிரிவு

சேலம்: “ஒரு தனியார் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்படக்கூடிய கோயிலுக்காக அரை நாள் விடுமுறையும், இலவச ரயிலும் விடப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் கேள்விக்கேட்க கூடாது. கேள்வி கேட்டால் நமக்கு ICEவைப்பார்கள். ICE என்றால், Income Tax,CBI,ED இவை மூன்றும் வரும். யார் கேள்வி கேட்டாலும், இவை அனைத்தும் நம்மை தேடி வரும்” என்று சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று (ஞாயிறு) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக, மாநாட்டுத் திடலில் உள்ள கொடிமரத்தில் உள்ள கட்சிக் கொடியை திமுக எம்.பி. கனிமொழி ஏற்றிவைத்தார்

மாநாட்டில் திமுக இளைஞர் அணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை முன்மொழிய அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் பதவியை அகற்றிட வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டும், துணைவேந்தர் பதவி முதல்வர் வசமே ஒப்படைக்கப்பட வேண்டும் ஆகியனவற்றை வலியுறுத்தி 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது: "பேரறிஞர் அண்ணா திமுகவைத் தொடங்கியபோது கூறினார். நம்முடைய கட்சிக் கொடியில் கருப்பு சிவப்பு வண்ணங்கள் இருக்கிறது. கருப்பு நிறம் இந்த சமூகத்தில் நிலவக்கூடிய அரசியல், சமூக, பொருளாதாரத்தின் இருண்ட பக்கங்களைக் காட்டும். இந்த நிலை மாற வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, கீழே இருக்கக்கூடிய சிவப்பு நிறம் இருக்கிறது. இந்த கருப்பு, சிவப்பாக மாற வேண்டும் என்றால், அது உதயசூரியனின் ஒளியாலே அந்த இருண்மை ஒழிக்கப்படும் என்றார்.

முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் அண்ணாவின் கனவு மற்றும் கருணாநிதி வழியிலேயே ஏறத்தாழ நிறேவேறிவிட்டது. இந்த திராவிட மாடல் ஆட்சி, இந்தியாவிலேயே தமிழகத்தை ஒரு தலைசிறந்த மாநிலமாக மாற்றியிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முதன்மையான இடத்தில் தமிழகம் இருப்பதற்கான பெருமையை முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். நீங்கள் கேட்கலாம், எல்லாம் கிடைத்துவிட்டது, கொடியில் ஏன் கருப்பு இருக்கிறது. முழுவதும் சிவப்பாக மாற்றிவிடலாமே என்று.

தென்னகத்தில் இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் சிவப்பு வந்துவிட்டது. ஆனால், வடநாட்டில் இன்னும் கருப்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை விரட்ட வேண்டிய கடமையும் நமக்கு இருக்கிறது. அந்த இருளை விரட்ட வேண்டிய கடமை நமக்கு இருப்பதால்தான், முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணியை ஒருங்கிணைத்து அங்கிருக்கக்கூடியவர்களை எல்லாம் ஒன்றாக இணைத்து அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

நாம் பெரியாரின் பிள்ளைகள். அதனால், இங்கே கொள்கைகளைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாளை வடஇந்தியாவில் ஒரு கோயிலைத் திறக்கிறார்கள். அந்த கோயிலைத் திறப்பது குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. ஏன்? குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்று நான் கேட்கப்போவதும் இல்லை. ஆனால், பிரதமர் நாளை கோயிலைத் திறக்கிறார். இன்று ஷேத்தாடனம் செய்து கொண்டிருக்கிறார். அதைப்பற்றியும் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஒரு கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்காமல் திறக்கலாமா? என்பதுதான் என்னுடைய கேள்வி. ஒரு கோயிலை முழுவதுமாக கட்டி முடிக்காமல் திறக்கக்கூடாது. ஆனால், நாங்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறோம். நாங்கள்தான் சனாதன தர்மத்தை காப்பாற்றுகிறோம். நாங்கள்தான் கோயில்களை எல்லாம் காப்பாற்றுகிறோம். எனவே, அனைத்து கோயில்களையும் எங்களிடமே கொடுத்துவிடுங்கள் என்று பாஜக கூறிக்கொள்கிறது.

முழுவதும் கட்டி முடிக்காத கோயிலைத் திறக்கக்கூடாது என்கிறது இந்து மதம். ஆனால்,அதை அரசியலாக்கி, அவர்களுடைய அரசியல் லாபத்துக்காக, இந்து மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்களுடைய ஆட்களே கோயிலுக்கு வரமாட்டேன் என்று கூறும் அளவுக்கு அரசியல் விளையாட்டிலே நாளை அந்த கோயிலை திறக்கப் போகிறார்கள். ஒரு தனியார் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்படக்கூடிய கோயிலுக்காக அரை நாள் விடுமுறையும், இலவச ரயிலும் விடப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் கேள்விக்கேட்க கூடாது. கேள்வி கேட்டால் நமக்கு ICE வைப்பார்கள். ICE என்றால், Income Tax,CBI,ED இவை மூன்றும் வரும். யார் கேள்வி கேட்டாலும், இவை அனைத்தும் நம்மை தேடி வரும்" என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்