ராமர் கோயில் திறப்பு: தமிழகத்தில் நாளை வீடுகள், குடியிருப்புகளில் தீபம் ஏற்றி வழிபட ஆளுநர் ரவி அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: "நாளை ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ராமர் கோயிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழகத்தில் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு ராஜ்பவன் எக்ஸ்தளப் பக்கத்தில், "நமது தேசம் இப்போதெல்லாம் ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன். 'ஸ்ரீ ராமர்' பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ராமர் கோயிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழகத்தில் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்", என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலில் நாளை (ஜன 22) கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. நண்பகல் 12.20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க, இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE