மாநாடு, கும்பாபிஷேகம் எதுவாகினும் பொதுமக்களுக்கு இடையூறின்றி நடத்தப்பட வேண்டும்: அன்புமணி கருத்து 

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: திமுக மாநாடாக இருந்தாலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறின்றி நடத்தப்பட வேண்டும் என தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்டத்தில் இன்று நடந்த பாமக பிரமுகர்கள் இல்ல திருமண விழாக்கள் மற்றும் காதணி விழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தருமபுரி வந்தார். இண்டூர் அடுத்த நல்லானூரில் நடந்த திருமண விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “அயோத்தியில் நாளை நடைபெற இருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைப்பு வந்தது. இருப்பினும் பணி சூழல் காரணமாகவும், கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், மற்றொரு நாளில் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல இருக்கிறேன். சேலத்தில் இன்று திமுக இளைஞரணி மாநாடு நடந்து வருகிறது. அது அவர்கள் கட்சியின் நிகழ்ச்சி என்பதால் அதுபற்றி பேச ஒன்றுமில்லை. இருப்பினும், திமுக மாநாடாக இருந்தாலும், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும் பொதுமக்களுக்கு இடையூறு இன்றி நடத்தப்பட வேண்டும்.

திராவிட மாடல் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் திமுக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? பிஹாரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்த போவதாக அந்த அரசு அறிவித்துள்ளது. எனவே, தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதை பாமக தொடக்கத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறது. ஒரு சில கட்சித் தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்கின்றனர். இந்த கணக்கெடுப்பின் பலன் குறித்து அவர்களுக்கு புரிதல் இல்லை” இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின் போது, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளர் வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, நிர்வாகிகள் சாந்தமூர்த்தி முருகசாமி உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE