மதுரை | 3 நாள் சுற்றுப் பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

By என்.சன்னாசி

மதுரை: தமிழகத்தில் 3 நாள் சுற்றுப் பயணத்தை முடித்த பிரதமர் மோடி இன்று (ஞாயிறு) மதியம் மதுரை விமான நிலையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னையில் கேலோ விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தல் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தில் ஆன்மிக சுற்றுப் பயணம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் சுற்றுப் பயணமாக தமிழகத்துக்கு வந்தார். நேற்று ராமேசுவரத்துக்கு வந்தவர், ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தமாடி தரிசனம் செய்தார். ராமேசுவரத்தில் தங்கிய பிரதமர் காலை தனுஷ்கோடிக்கு சென்றார். இதன் பின், மதியம் ராமேசுவரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு வந்து, தனி விமானம் மூலம் டெல்லி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, மதியம் சுமார் 12.40 மணியளவில் மதுரை விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

அவரை விமான நிலையத்தின் உட்பகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்,பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ராம.சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மதுரை ஆட்சியர் சங்கீதா, மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ராவீந்திரநாத் எம்பி, ஓபிஎஸ் அணியைச் சார்ந்த தர்மர் எம்.பி. உட்பட 39 பேர் சந்தித்தனர். சந்திப்புக்குப் பின் பிரதமர் சுமார் 1 மணிக்கு விமானப் படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் வருகையையொட்டி, மதுரை விமான நிலையத்தில் 8 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப் பட்டது.

மாநகர காவல் ஆணையாளர் லோக நாதன் தலைமையில் 2 துணை ஆணையர், 8 உதவி ஆணையாளர்கள் அடங்கிய 1,500 போலீஸார், விமான நிலைய நுழைவு பகுதி, முகப்பு ( பெருங்குடி ) மற்றும் விமான நிலைய பின் பகுதியிலுள்ள வலையங்குளம், சின்ன உடைப்பு, பரம்பு பட்டி போன்ற பகுதி என 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 300 பேர் விமான நிலைய உள், வெளிப் பகுதி, நுழைவிடம், பயணிகள் அனுமதிக்கும் வழி மற்றும் விமான ஓடுதளம் என 5 அடுக்கு பாதுகாப்பிலும் ஈடுபட்டிருந்தனர். பிரதமர் வருகையால் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை தவிர, உறவினர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட யாரும் மதியம் 1 மணி வரை அனுமதிக்கவில்லை.

பிரதமரை சந்திக்க அனுமதிக்கப்பட்டோர் 5 வது எண் நுழைவு வாயில் வழியாகவே விமான நிலையத்துக்கு உள்ளே சென்றனர். விமான நிலைய இயக்குநர் முத்துக் குமார், மத்திய பாதுகாப்பு படை துணை கமாண்டண்ட் விஸ்வநாதன், விமான நிலைய முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேசன், மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மதுரை காவல் கண் காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE