‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாமை இப்படி நடத்தலாமே!

By ந.முருகவேல் 


கள்ளக்குறிச்சி: பொது மக்களின் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணும் விதமாக, வருவாய், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, ஆதி திராவிடர் நலன், சிறுபான்மையினர் நலன், சமூக நலன், மின்சாரம், தொழிலாளர் நலன் உள்ளிட்ட 13 முக்கிய துறைகள் அடங்கிய ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த டிச. 18-ம் தேதி கோவையில் தொடங்கி வைத்தார்.

மாநிலம் முழுவதும் மொத்தம் 1,745 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, முகாம்கள் மூலமாக பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மனுக்கள் மீது ஜன. 17-ம் தேதிக்குள் தீர்வு கண்டு, அதற்கு அடுத்த நாள் முதல் மனுதாரார்களுக்கு தீர்வு அல்லது அதற்கான பதிலளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த மாதம் இறுதி தொடங்கி இம்மாதத்தின் முதல் இரு வாரங்களில் அரசு ஊழியர்கள் நேரம் காலம் பாராமல் அதிகவனம் செலுத்தி வந்தனர்.

இருப்பினும் மனுக்கள் மீதான நடவடிக்கை எடுப்பதற்கு போதிய அளவு மனிதத் திறன் இல்லை.பணியாளர் பற்றாக்குறை நிலவுவதால், மொத்தப் பணிச்சுமையும் குறைந்த அளவிலான ஊழியர்கள் மீதே திணிக்கப் படுகின்றன. இதனால் மனஅழுத்தம் ஏற்படுவதாக அரசு ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிலையில் உள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொறுப்பு அலுவலர் என்ற முறையில் ஊழியர்களை பணி செய்ய வைக்க முடியவில்லை. டிசம்பர் 18-ம் தேதி தொடங்கிய திட்டத்தை ஒரு மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் அதிக விடுமுறை நாள் வந்தது. பணியாளர்கள் பலர் விடுமுறையை பயன்படுத்துகின்றனர்.

நாங்களோ ஆட்சியரிடம் நேரடியாக பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பணியாளர்களிடம் ஓரளவுக்குத் தான் அழுத்தம் கொடுக்க முடியும். அவர்கள் தொடர் மருத்துவ விடுப்பு எடுத்து விட்டால் அந்த பணிச்சுமையும் என்னை வந்து சேரும்” என்று தெரிவிக்கிறார்.

“இது போன்ற சிறப்பு முகாம்களை நடத்தும் போது, அதற்குரிய மனிதத் திறனை கொடுக்காமல் மொத்தப் பணிச்சுமையையும் ஒரு சிலரிடமே கொடுத்தால் என்ன செய்வது? இரவு பகல் பாராமல் வேலை செய்கிறோம். அதற்குரிய பலனாவது கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை” என்று இந்த முகாம்களில் முன்நின்ற அரசு ஊழியர்கள் பலர் ஆதங்கப்படுகின்றனர்.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கான தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கச் செயலாளர் மகாலிங்கம் கூறுகையில், “தமிழக முதல்வரின் இத்திட்டம் வரவேற்கக் கூடியதே. நீண்ட நாளாக இருக்கும் பல பிரச்சினைகளுக்கு இங்கு தீர்வு கிடைக்கிறது. அதே நேரத்தில் மனிதத் திறன் குறைவாக உள்ளதை அரசு கவனத்தில் கொண்டால் இதுபோன்ற முகாம்களை சிறப்பாக நடத்தலாம். இது போன்ற திட்டங்களுக்கென மாநிலம் முழுவதும் துறைகள் வாரியாக புதிய நிரந்தரப் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். அப்போது தான் நடப்பு பணி பாதிக்கப்படாது” என்று தெரிவிக்கிறார்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற்ற இந்த முகாம்களில் இருந்து பெறப்பட்ட பல மனுக்களுக்கு இந்த குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தீர்வு காணமுடியவில்லை என்பதை களத்தில் கண் கூடாக பார்க்க முடிகிறது. அரசு ஊழியர்கள் சொல்வது போல கூடுதல் பணியாளர்களை நியமித்து, முறையே திட்டமிட்டு செய்தால் மட்டுமே இதுபோன்ற சிறப்பு முகாம்கள் மக்களுக்கு பயனளிக்கும். அதை விட்டு, இது போன்ற சிறப்பு முகாம்களை வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்து நடத்தி வரும்பட்சத்தில், ஒரு இடத்தில் கொடுத்த மனுவை மற்றொரு இடத்தில் கொடுத்து, மனுதாரர்களை தேவையற்ற அலைக்கழிப்புக்கு ஆட்படுத்தும்.

நீண்ட நாட்களாக பிரச்சினைகள் தீராமல் இருந்து வந்து, இந்த முகாமில் தீர்வு கிடைத்து விடும் என்று நம்பி வரும் பொது மக்களிடையே இது மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தவே வழிவகுக்கும். நல்ல திட்டங்களை கொண்டு வரும் அரசு, அதை நல்ல முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். நம் விருப்பமும் அதுவே.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE