புதுச்சேரி ஜிப்மரில் திங்கள்கிழமை அவசர சிகிச்சைகள் வழக்கம்போல் நடைபெறும்: ஐகோர்ட்டில் உத்தரவாதம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் எதுவும் இல்லை. அவசர சிகிச்சைகள், பரிசோதனைகள் வழக்கம்போல் நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கலாம் விதைகளின் விருட்சம் சமூக இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனர் ராஜா என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில்,அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.22) நடைபெறுகிறது. இதையொட்டி, மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய தொழில்துறை நிறுவனங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசுப் பணியாளர்கள் நலத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து மத்திய அரசு அலுவலகங்களான மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு நாளை அரைநாள் விடுப்பு அளித்து மத்திய நிதி அமைச்சகமும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், புதுச்சேரியில் நாளை அரசு விடுமுறை விடப்படுவதாக, அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். மேலும், மத்திய அரசின் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை திங்கள்கிழமை பகல் 2.30 மணி வரை இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. எனினும் அவசர சிகிச்சைப்பிரிவு அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை ரத்து செய்து, மருத்துவமனையை பகல் 2.30 மணி வரை மூட தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு அவசர வழக்காக, தலைமை நீதிபதி எஸ்.கே.கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில், விடுமுறை நாளான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், மருத்துவமனை மூடப்படுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுவர். அன்றைய தினம் மருத்துவ பரிசோதனைக்கான தேதிகளைப் பெற்றவர்கள், மீண்டும் அந்த வாய்ப்பை பெறுவதற்கு மூன்று மாதங்கள் ஆகலாம். மேலும், மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக தேதி நிர்ணயிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களும் பாதிக்கப்படுவர். எனவே, மருத்துவமனையை மூட வேண்டும் எனக்கூறி, மத்திய அரசுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை" என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, நாளை காலை ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் எப்போது நடத்தப்படும்? என்று கேள்வி எழுப்பினார். அப்போது இதுதொடர்பாக மருத்துவமனை இயக்குநரிடம் விளக்கம் பெற்று பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மருத்துவமனையில் நாளை திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் எதுவும் இல்லை. அவசர சிகிச்சைகள், பரிசோதனைகள் வழக்கம்போல் நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பரிசோதனைகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்