திமுக இளைஞரணி மாநாடு மக்களவை தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: சேலம் திமுக இளைஞரணி மாநாடுமக்களவைத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற உள்ளது. இதில்,தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளரும், அமைச்சருமான உதயநிதி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி பொறுப்பேற்ற பின்னர் நடத்தும் முதல் இளைஞரணி மாநாடு என்பதால், மாநாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளுக்கும், கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், திமுக இளைஞரணி மாநாடு குறித்த வீடியோ பதிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "மக்களவைத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாக நடைபெறவுள்ள சேலம் இளைஞரணி மாநாடு" என்று குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப்பதிவில், “சேலம் அழைக்கிறது, செயல்வீரர்களே வாரீர். லட்சோப லட்சஇளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவிருக்கிறது.

மாநில உரிமைகளை மீட்டெடுத்து, இந்தியாவைகாப்பதற்கு கட்சித் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. ‘இண்டியா’ கூட்டணி வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி, பன்முகத்தன்மை காக்க சேலத்தில் கூடிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE