ஸ்ரீரங்கத்தில் கம்ப ராமாயண பாராயணம் கேட்டு மகிழ்ந்தார் பிரதமர் மோடி: இன்று தனுஷ்கோடி செல்கிறார்

By செய்திப்பிரிவு

திருச்சி/ராமேசுவரம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வேட்டி, சட்டையுடன் நேற்று தரிசனம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, கம்பர் ராமாயணம் இயற்றிய மண்டபத்தில் அமர்ந்து தமிழில் கம்ப ராமாயண பாராயணத்தை கேட்டு மகிழ்ந்தார்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் விரதம் மேற்கொண்டு, நாட்டில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபட்டு வருகிறார். அதன்படி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக நேற்றுசென்னையிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடுக்கு காலை 10.30 மணிக்கு வந்தார். அவரை திருச்சி ஆட்சியர் மா.பிரதீப்குமார், மாநகர காவல் ஆணையர் என்.காமினி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர், அங்கிருந்து காரில் பஞ்சக்கரை சாலை, வடக்கு வாசல், வடக்கு உத்திர வீதி, கிழக்கு உத்திர வீதி, தெற்கு உத்திர வீதி வழியாக 2.5 கி.மீ. தொலைவு பயணித்து, தெற்கு வாசல் ‘ரங்கா ரங்கா’ கோபுரத்துக்கு வந்தார். பின்னர் தமிழர் பாரம்பரிய வேட்டி, சட்டை, பட்டு அங்கவஸ்திரம் அணிந்தார். அவருக்கு ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் தங்கக் குடத்தில் பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், கோயிலுக்குள் சென்றபிரதமர், ரங்க விலாஸ மண்டபத்தில் பல்லக்கில் வீற்றிருந்த உற்சவர் ரங்கநாதரை வழிபட்டார். தொடர்ந்து, ஆஞ்சநேயர் சந்நிதியில் வழிபட்டார். கோயில் பட்டர்கள் சார்பில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்காக வழங்கப்பட்ட பட்டு வஸ்திரங்களை பிரதமர் பெற்றுக்கொண்டார்.

பின்னர் கார்த்திகை கோபுரம் வழியாகச் சென்று கருடாழ்வார் சந்நிதியில் சேவித்துவிட்டு, ஆரியபடாள் வாசல் வழியாக தங்கக் கொடிமரத்தை அடைந்தார். அங்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தொடர்ந்து, மூலவர் நம்பெருமாள், தாயார் சந்நிதியில் வழிபட்டார்.

பின்னர், தாயார் சந்நிதிக்கு எதிரே கம்பர் ராமாயணம் இயற்றிய மண்டபத்துக்கு வந்து அமர்ந்தார். அங்கு, கர்னாடக இசைக் கலைஞர் டாக்டர் பிரியா ராமச்சந்திரன் தலைமையில் கம்ப ராமாயண சிறப்பு சொற்பொழிவு மற்றும் பாராயணம் நடைபெற்றது.

சென்னை பச்சையப்பா கல்லூரியின் ஓய்வுபெற்ற தமிழ்த் துறைத்தலைவர் தெ.ஞானசுந்தரம் வால்மீகி ராமாயணம் - கம்ப ராமாயணம் ஆகியவற்றுக்கிடையே உள்ள வித்தியாசங்கள் குறித்து சொற்பொழிவாற்றினார். கர்னாடக இசைக் கலைஞர்கள் சிக்கில் குருசரண், சாருலதா ராமானுஜம், சாருலதா, ஜனனி குழுவினர் கம்பராமாயணப் பாடல்களை பாடினர்.இலங்கை ஆன்மிகச் சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் கம்பராமாயணச் சொற்பொழிவாற்றினார்.

பின்னர், ராமானுஜர் சந்நிதியில் தரிசனம் மேற்கொண்ட பிரதமர், கோயிலில் இருந்து புறப்பட்டு பஞ்சக்கரை ஹெலிகாப்டர் தளம் சென்றார். அங்கிருந்து ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றார்.

உற்சாக வரவேற்பு: ராமேசுவரத்துக்கு ஹெலிகாப்டரில் வந்த பிரதமர், பிற்பகல் 3 மணியளவில் அக்னி தீர்த்தக் கடற்கரைக்கு பேட்டரி காரில் சென்றார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அக்னி தீர்த்தக் கடலில் பைஜாமா ஜிப்பா உடையுடன், கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து புனித நீராடிய பிரதமர் மோடி, அங்கிருந்து ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்றார். அங்கு அவருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பின்னர், ராமநாத சுவாமி, பர்வதவர்தினி அம்பாள் சந்திதிகளில் தரிசனம் செய்தார்.

தொடர்ந்து, திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற ‘ஸ்ரீராமாயண பாராயணம்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில், 8 வெவ்வேறு பாரம்பரிய மண்டலிகள் சம்ஸ்கிருதம், அவதி, காஷ்மீரி,குர்முகி, அசாமி, பெங்காலி, மைதிலி மற்றும் குஜராத்தி மொழிகளில் பாராயணம் செய்தன.தொடர்ந்து, பஜனை சந்தியா நிகழ்ச்சியிலும் பிரதமர் பங்கேற்றார்.

மாலை 6.10 மணியளவில் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து வெளியே வந்த பிரதமர், அங்கிருந்து ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று தங்கினார்.

இன்று காலை 8.55 மணிக்கு ராமேசுவரம் ராமகிருஷ்ண மடத்திலிருந்து காரில் தனுஷ்கோடி செல்லும் பிரதமர், அங்கு கடற்கரையில் சிறப்பு பூஜை செய்கிறார். பின்னர், ராமர் பாலம் கட்டப்பட்ட இடமாகக் கூறப்படும் அரிச்சல்முனைக்குச் செல்கிறார்.

காலை 10.30 மணிக்கு தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். காலை 11.05 மணிக்கு அங்கிருந்து காரில் ராமேசுவரம் திரும்பி ஹெலிகாப்டர் மூலம் மதுரை சென்று, விமானம் மூலம் பிற்பகல் 12.35 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமரின் வருகையையொட்டி ராமேசுவரத்தில் 5 அடுக்குபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக் காரணங்களுக்காக பொதுமக்கள் இன்றுதனுஷ்கோடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘மீண்டும் ஸ்ரீரங்கம் வர முயற்சி செய்கிறேன்' - ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்களில் ஒருவரான சுந்தர் பட்டர் கூறியதாவது: ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பிரதமர் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 1 மணி நேரம் 40 நிமிடங்கள் கோயிலில் இருந்த பிரதமர், பெரிய பெருமாளிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தார். தரிசனங்களை முடித்த பின்னர், ‘இந்தக் கோயிலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் இங்கு வர முயற்சி செய்கிறேன்’ என்றார்.

ஸ்ரீரங்கத்தில் பாஜக மற்றும் பல்வேறு ஆன்மிக அமைப்பினர், பொதுமக்கள் மலர்கள் தூவி பிரதமரை வரவேற்றனர். பிரதமரின் கார் வடக்கு வாசலை அடைந்தபோது, காரில் நின்றபடி கையசைத்துக் கொண்டே பொதுமக்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்டார் பிரதமர். ரங்கநாதர் கோயிலைச் சுற்றியுள்ள உத்திர மற்றும் சித்திரை வீதிகளில் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் விளக்கேற்றி வைத்திருந்தனர். மேலும், சாலை முழுவதும் கோலமிட்டு அலங்கரித்திருந்தனர்.

ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாளுக்கு பிரதமர் மோடி பழங்கள் வழங்கினார். அப்போது அவரது தலையில் துதிக்கையை வைத்து ஆசி வழங்கிய யானை, பின்னர் மவுத் ஆர்கன் வாசித்துக் காட்டியது. அதை வியப்புடன் பார்த்து ரசித்த பிரதமர் மோடி, யானையின் துதிக்கையில் வாஞ்சையாகத் தட்டிக்கொடுத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE