தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு ஜன.29 முதல் 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.22) திறந்து வைக்க உள்ளார். 23-ம் தேதி முதல் பொதுமக்கள் வழிபாட்டுக்கு கோயில் திறக்கப்பட உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு செல்ல விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, ஆஸ்தா (நம்பிக்கை) சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது. மொத்தம் 66 நகரங்களில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம் உட்பட 9 நகரங்களில் இருந்து ஆஸ்தா ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நாளை முதல் இந்த சிறப்பு ரயில் பயணம் தொடங்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்களை இயக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதுள்ள நிலவரப்படி, அயோத்தி தாம் ரயில் நிலையத்துக்கு ஒருநாளைக்கு 100 ரயில் சேவைகளை இயக்க முடியும். அதனால், சென்னை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்களை இயக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. இந்த பயணத்துக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்யும் சிறப்பு ரயில்கள், ஜன. 29-ம் தேதி முதல் பிப்.29-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE