ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை காஞ்சியில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்/செங்கல்பட்டு: அயோத்தியைப் போலவே காஞ்சிபுரமும் ஏழு ‘மோட்ச நகரங்களில்’ ஒன்றாகக் கருதப்படுகிறது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தசரத மன்னன் "புத்திரகாமேஷ்டி யாகம்" செய்வதைவிளக்கும் சிற்பம் உள்ளது.அயோத்திக்கும், காஞ்சிபுரத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து கருட புராணத்திலும் குறிப்புகள் உள்ளன.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சி காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் மண்டபத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியையொட்டி காலை 8 மணிக்கு ராம நாம சங்கீர்த்தனம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு நாகை முகுந்தனின் கம்பராமாயண உபன்யாசம் நடைபெறஉள்ளது. காலை 10 மணிக்குபத்ம பூஷண் சுதா ரகுநாதன், உமையாள்புரம் கே.சிவராமன் குழுவினரின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் இடம் பெறுகின்றன. இதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ராம நாம சங்கீர்த்தனம், பகல் 12 மணி அளவில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். காஞ்சிபுரம் மாநகர் ஆன்மிக பேரவை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்த விழாவுக்காக வரும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜன. 21-ம் தேதி (இன்று) மதுராந்தகம் வருகிறார். அங்கு ஏரிகாத்த ராமர் கோயிலில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். அதன் பின்னர் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உபநிஷத பிரம்மேந்திர மடத்துக்குச் சென்று, பின்பு வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனமும் செய்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE