காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு திட்டம்: பிப்ரவரியில் தொடங்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை காவல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பாதுகாப்பு திட்டம் அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்தார்.

சென்னை போக்குவரத்து காவல்துறை மற்றும் போக்குவரத்து வார்டன் சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள், பள்ளிமாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகளை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கருப்பொருளை மையப்படுத்தி, அதன் மாதிரி வடிவமைப்பை பள்ளி மாணவர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனைகாவல் ஆணையர் சந்தீப் ராய்ரத்தோர் பார்வையிட்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து சிறப்பான வடிவமைப்பு செய்த ஆதம்பாக்கம் டிஏவி பள்ளிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், சவுகார்பேட்டை  பாதல்சந்த் சாயர்சந்த் சோர்டியா ஜெயின் வித்யாலயா மெட்ரிக் பள்ளிக்கு இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கினார்.

இதையடுத்து சென்னை போக்குவரத்து காவல் துறையில் பொதுமக்களுக்கு சிறப்பான போக்கு வரத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய வேப்பேரி போக்குவரத்துகாவல் ஆய்வாளர் பாண்டிவேலுக்கு பரிசு வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 67 பள்ளிகளைச் சேர்ந்தமாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். சாலை விபத்துகளைக் குறைப்பது, தானியங்கி சிக்னல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்த மாதிரியை மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். இதில் நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய பல புதிய யோசனைகளை மாணவர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். சாலையில் நெரிசல் இல்லாமல் சீரான போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கு பல புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம்.

சென்னையில் சூரிய ஒளி சிக்னல் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளது. இதைவிட குறைந்த செலவிலான, சிக்னல் அமைப்பை மாணவர் ஒருவர் வடிவமைத்திருக்கிறார். அதனை சென்னை சாலைகளில்உள்ள சிக்னலில் பயன்படுத்தபரிசீலனை செய்ய திட்டமிட்டுள் ளோம். அதுமட்டுமில்லாமல், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போக்குவரத்து வார்டன் ஆகியோரை ஒருங்கிணைத்து பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான புதிய திட்டத்தை (‘ஸ்கூல் சேஃப்டி ஸோன்’) அடுத்த மாதம் முதல் செயல்படுத்த இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE