“அன்பின் பாடத்தை மீனவர்கள் கற்றுத் தந்துள்ளனர்” கனிமொழி எம்.பி. பாராட்டு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றியதன் மூலம் மீனவர்கள் அன்பின் பாடத்தை சொல்லித் தந்துள்ளனர் என்று கனிமொழி எம்பி தெரிவித்தார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் வெள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை சார்பில் தூத்துக்குடியில் பாராட்டு விழா நேற்று நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பெ.கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால் நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு, 850 மீனவர்கள் மற்றும் 12 அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: திருநெல்வேலி, கன்னியாகுமரி தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள், எங்கு மனிதர்கள் அவதிப்பட்டாலும் அவர்களை காப்பாற்ற எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி களம் இறங்குகின்றனர். இது அவர்களிடம் இருந்து பல நாடுகளும், பல அரசாங்கங்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

ஏனென்றால் நிறைய பேர் தவறான கொள்கைகளை வைத்துக் கொண்டு வெறுப்பை மட்டும் தான் விதைத்துக் கொண்டிருக் கின்றனர். வெறுப்பு தான் வெற்றி என்று நினைத்துக் கொண் டிருக்கின்றனர். ஆனால் அவை அத்தனையையும் கடந்து மக்களை காப்பாற்றியதன் மூலம் மீனவர்கள், அன்பின் பாடத்தை சொல்லி தந்துள்ளனர். தண்ணீர் செல்லும் வேகத்தில் படகை செலுத்த முடியாத நிலை இருந்தது. ஆனாலும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று தண்ணீரில் இறங்கிய போதுதான் அவர்களின் தைரியம், அன்பு, வீரம், மனித நேயம் ஆகியவற்றை கண் கூடாக பார்க்க முடிந்தது.

ஒரு வேளை உணவை பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கக் கூடிய பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, பெரியவர் களுக்கு தருவதற்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மீனவர்கள் தான். உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தருவதற்கான முயற்சி களை எடுப்போம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை ஆணையர் கே.சு.பழனிசாமி, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமி பதி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியா?: தூத்துக்குடியில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழைக் காலத்தில் மக்களை காப்பாற்றிய மீனவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டு, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு கொடுத்துள்ளோம். கடற்கரை ஓரங்களில் எந்தெந்த இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். எந்த இடத்தில் மீன் பிடித்தளங்கள் அமைக்க வேண்டும் என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறோம். அதனை விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்பாசிகளை வளர்த்து அதை உணவுப் பொருளாக மாற்றுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆறு மற்றும் குளங்களில் நாட்டு வகை மீன்களை வளர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட்டபோது பாதிக்கப்பட்ட படகுகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

அவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்படும். வெள்ளத்தின் போது, பல படகுகள் காணாமல் போய் உள்ளன. பல படகுகளில் இன்ஜினில் பழுது ஏற்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை குறித்த விவரங்கள் அனைத்தும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதற்கான முழுதொகையும் விரைவில் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.

கனிமொழி எம்.பி. கூறும்போது, ‘‘அரசியலில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அது நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE