போதைக்கு அடிமையாகும் பள்ளி மாணவர்கள்

By செய்திப்பிரிவு

காரைக்காலில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலர் தற்போது புதுவிதமான போதைக்கு அடிமையாகி வருவது தெரிய வந்துள்ளது.

காரைக்கால் கோவில்பத்து பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர், அருகில் உள்ள இரும்பு மற்றும் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடையில் தொடர்ந்து ரப்பர் பேஸ்ட் எனப்படும் ஃபெவிபாண்ட் பசையை வாங்கிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு மாணவர்கள் அடிக்கடி ஃபெவிபாண்ட் வாங்குவது அதிகரித்துக்கொண்டே சென்றதால், கடை உரிமையாளரும், சமூக ஆர்வலருமான தியாகு மாணவர்களைக் கண்காணித்துள்ளார். இதை எதற்காக வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, செருப்பு, மற்றும் பை அறுந்துவிட்டால் ஒட்டுவதற்கு என்று தெரிவித்தார்களாம்.

இதனால் சந்தேகமடைந்த தியாகு, சில மாணவர்களைப் பின்தொடர்ந்து சென்று கண்காணித்துள்ளார். அப்போது, ஃபெவிபாண்ட் வாங்கிய மாணவர்கள், தண்ணீர் பாக்கெட்டில் ஃபெவிபாண்ட் பசையைக் கலந்து குடித்துள்ளனர்.அவர்களைப் பிடித்து விசாரித்தபோது, ஃபெவிபாண்ட் கலந்த நீரைக் குடித்தால் போதை ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர். பள்ளி மாணவர்கள் பலர் இந்த போதைக்கு அடிமையாகி வருவது, காரைக்கால் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தியாகு கூறும்போது, “இந்தப் பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, போதையின் பாதையில் மாணவர்கள் செல்லாமல் காப்பாற்ற வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE