பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் அதிகரிக்கும் டெங்கு - அதிகாரிகள் அமைதி

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் கனமழை பெய்த போது குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம், ஒரு மாதம் கடந்தும் இன்னமும் வடியாமல் உள்ளது. சுகாதார சீர்கேடுகளால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டையில் கடந்த மாதம் 17, 18-ம் தேதிகளில் வரலாறு காணாத வகையில் பெய்த அதி கனமழையால் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கும் நிலை ஏற்பட்டது. நீர் வழித் தட ஆக்கிரமிப்புகளால் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சுழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வடிந்து விட்ட நிலையில், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் இதுவரை வடியாமல் தேங்கியிருக்கிறது.

இதுபோல் பாளையங்கோட்டை சேவியர் காலனியில் காலி வீட்டு மனை பகுதிகளில் தேங்கிய தண்ணீர் இதுவரை வடியவில்லை. பல நாட்களாக தண்ணீர் தேங்கியிருப்பதால் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. சேவியர் காலனி, தியாகராஜ நகர் பகுதிகளில் டெங்கு பாதிப்பும்அதிகமுள்ளதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். குடியிருப்பு பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வடியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு பலமுறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தியாகராஜ நகரைச் சேர்ந்த சங்கரேஸ்வரன் கூறியதாவது: தியாகராஜ நகரில் மார்ஷல் நகர், முத்தமிழ் நகர், சாய் பாபா காலனி மற்றும் சுற்று வட்டார பகுதி குடியிருப்புகளில் கடந்த ஒரு மாதமாக மழை நீர் தேங்கியுள்ளது. இங்குள்ள மழைநீர் வடிகால்களை சீரமைத்து தண்ணீரை வடியவைக்க வழியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் 3 முறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். பல நாட்களாக தண்ணீர் தேங்கியிருப்பதால் துர் நாற்றம் வீசுகிறது. சிலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையால் மக்கள் அவதிப் படுகின்றனர். உடனடி நடவடிக்கை தேவை என்றார் அவர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE