சென்னை: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்று முத்தரப்பு பேச்சுவார்த்தையின்போது போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ், எம்எல்எப் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தன.
இதுதொடர்பான 3-ம் கட்ட சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10 தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், வேலைநிறுத்தம் தொடர்பான 3-ம் கட்ட பேச்சுவார்த்தை, தொழிலாளர் துறை தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில், மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன், பிற போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்கள் தரப்பில், அ.சவுந்தரராசன், கே.ஆறுமுகநயினார், ஆர்.கமலகண்ணன், தாடி ம.இராசு, வெங்கடேசன், ஆறுமுகம், கனகராஜ், வி.தயானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
போக்குவரத்துக் கழக நலனுக்கு முரணான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு, நிர்வாகங்கள் தரப்பில், “ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடர்பான கோப்புகள் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பிப்.6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அகவிலைப்படி உயர்வு வழக்கில் பிறப்பிக்கும் தீர்ப்புக்கு ஏற்ப செயல்பட தயாராக இருக்கிறோம். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது” என்றனர். இதையடுத்து, பிப்.7-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறும்போது, “பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் வராதது வருத்தம் அளிக்கிறது. காலவரையறைக்குட்பட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக இல்லை. இது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதுதொடர்பாக வரும் 30-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களும், வாயிற்கூட்டங்களும் நடைபெறும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago