ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் ஆதாயம் தேட பிரதமர் மோடி முயற்சி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அயோத்தியை ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாற்றுவதற்காக ரூ.11 ஆயிரம் கோடி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்திருக்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ தொலைவில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மாற்று மசூதி கட்டுவதற்கான முயற்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முஸ்லிம் அமைப்புகள் தொடங்கிய அறக்கட்டளையில் ரூ.45 லட்சம்தான் நிதி சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், ராம ஜென்ம பூமி அறக்கட்டளையில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.900 கோடி செலவிடப்பட்டு, இன்னும் ரூ.3 ஆயிரம் கோடி டெபாசிட் இருக்கிறது.

ஸ்ரீரங்கம், ராமநாதபுரம் கோயில்களுக்கு மோடி செல்வது அரசியல் ஆதாயத்துக்குத்தான். தமிழக மக்களை கடந்த ஒன்பதரை ஆண்டுகாலமாக வஞ்சித்து வரும் பிரதமரின் ஆன்மிக சுற்றுப்பயணம் மூலம் விரிக்கிற அரசியல் மாய வலையில் தமிழக மக்கள் சிக்க மாட்டார்கள். தமிழகம் என்றைக்குமே பாஜக எதிர்ப்பு பூமியாகவே உள்ளது.

எனவே, ஆன்மிகப் பயணத்தின் மூலம் தமிழக மக்களிடம் ஆதரவை திரட்டும் பிரதமர் மோடியின் முயற்சி வெற்றி பெறாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE