சென்னை: அண்ணாசாலையில் தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை இடையில் 3.20 கிமீ தொலைவுக்கு ரூ.621 கோடி செலவில் 4 வழித்தட உயர்மட்ட சாலை கட்டுமானப்பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை, அண்ணா சாலை சென்னை மாநகரின் மிகவும் முக்கியமான சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகக் காணப்படுகிறது. குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உள்ள 3.5 கி.மீ.தொலைவைக் கடக்க 25 முதல் 30 நிமிடங்கள் ஆகிறது. இடைப்பட்ட அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. குறிப்பாக நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் சந்திப்பு ஆகியவற்றில் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த 2022-23-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.621 கோடி மதிப்பீட்டிலான நான்கு வழித்தட உயர்மட்டச் சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைச் செயல்படுத்தும் விதமாக, தேனாம்பேட்டையிலிருந்து - சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, தியாகராயா சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாஃப் சாலை சந்திப்பு, நந்தனம் சந்திப்பு, சிஐடி நகர் 3-வது மற்றும் முதல்பிரதான சாலை சந்திப்பு, ஜோன்ஸ் சாலைசந்திப்பு ஆகிய 7 முக்கிய சாலை சந்திப்புகளைக் கடக்கும் வகையில் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் வரை 3.20 கி.மீ. நீளத்துக்கு 14 மீ அகலம்கொண்ட 4 வழித்தட உயர்மட்ட சாலைஅமைக்கத் திட்டமிடப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அண்ணா சாலையின் கீழே சென்னை மெட்ரோ ரயிலின் சுரங்கப் பாதை செல்வதால் இதை வடிவமைப்பது பெரும் சவாலாகவே இருந்து வந்தது. இப்பாலத்திலிருந்து வரும் அழுத்தம் சாலையின் கீழே தற்போது இயங்கி வரும் சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைகளை சிறிதளவும் பாதிக்காத வண்ணம் வடிவமைக்க வேண்டி இருந்தது. மேலும்பாலத்தின் அடித்தளம் அமைக்க ஆழமான பள்ளங்களை மற்றும் நீண்ட துளைகளை எடுக்க முடியாது என்பதால், ஆழம் குறைந்த அடித்தளம் (shallow Foundation) மட்டுமே அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அதே நேரம், இப்பகுதியில் மண்ணின் தாங்கும் திறன் குறைந்த அளவே உள்ளதால், ஆழம் குறைந்த அடித்தளம் கொண்டு வடிவமைப்பதும் சாத்தியமில்லை என்பது தெரிந்தது.
இதற்கு தீர்வு காண, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வல்லுநர்கள், ஐஐடி மெட்ராஸ் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து, ஜெர்மன் நாட்டுதொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து தற்போதுஇந்த உயர்மட்ட சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாலத்தின் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் இரும்பினால் ஆன முன்வார்க்கப்பட்ட (prefabricated) கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகளை ரூ.621 கோடியில் மதிப்பீட்டில் மேற்கொள்ள இறுதி செய்யப்பட்டது. மேலும் இப்பணி பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம் அடிப்படையிலான ஒப்பந்த முறையில் மேற்கொள்ளப்படவுள்ளது
மெட்ரோ ரயில் சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதியில் கட்டப்படும் முதல் உயர்மட்ட சாலை இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தஉயர்மட்ட சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.5 கி.மீ. தொலைவை 3 முதல் 5 நிமிடங்களிலேயே கடந்து செல்லலாம். மேலும் கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலம் பணிகள் தொடக்க விழாநிகழ்ச்சியில், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், துறையின் செயலர் பிரதீப் யாதவ், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ஆர்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago