நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில உரிமைகளை கொண்டாடும் மத்திய அரசு அமையும்: பீட்டர் அல்போன்ஸ் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநில உரிமைகளை கொண்டாடும் மத்திய அரசு அமையும் என, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டாபிராம் தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக் கல்லூரி மற்றும் ஆவடி இமாக்குலேட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை செயலகம் சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மகளிர் மற்றும் அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி மேற்கொண்ட பணிகள் குறித்து விரிவாக விளக்கினார்.

மேலும், இந்த கருத்தரங்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சு போட்டிகளின் இறுதி போட்டிகளும் நடைபெற்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித் தனியாக நடைபெற்ற இந்த போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில்,ஆட்சியர் பிரபுசங்கர், தமிழக சட்டபேரவை இணை செயலர்கள் சாந்தி, பாண்டியன், துணை செயலர் பாலகிருஷ்ணன், மாவட்ட முதன்மை கல்விஅலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெற்றி கூட்டணி: இந்த கருத்தரங்கின்போது, செய்தியாளர்களிடம் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தாவது: தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி, வெற்றி கூட்டணி. கடந்த பல தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றிகளை ஈட்டியிருக்கும் இந்த கூட்டணி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், நூற்றுக்கு நூறு வெற்றியை ஈட்டும்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நல்ல கூட்டணியை அமைத்து, இதே போன்ற கூட்டணியை இந்தியாவிலும் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில், திமுக கூட்டணி, இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும் நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்போது, மாநில உரிமைகளை கொண்டாடும் அரசாக மத்திய அரசு அமையும். அந்த அரசு, மாநில மக்களின் விருப்பங்கள், அவர்களின் தேவைகள், மாநில அரசுகளின் கோரிக்கைகள் ஆகியவற்றை முன்னிறுத்தி, கூட்டாட்சி தத்துவத்தில், மாநிலங்களை முன்னிறுத்தும் ஒன்றிய அரசாக செயல்படும். அந்த சமயத்தில், நீட் போன்ற பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப் பட்டு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE