“மணிப்பூர் வீரர்களுக்கு சகோதர உணர்வோடு தமிழகத்தில் பயிற்சி” - முதல்வர் ஸ்டாலின் @ கேலோ இந்தியா தொடக்க விழா

By செய்திப்பிரிவு

சென்னை: "மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளால், அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போக, அவர்களை சகோதர உணர்வோடு தமிழகத்துக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்தது, நம்முடைய திராவிட மாடல் அரசு. அவர்களில் சிலரை, இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்” என்று சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்துக்கு 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர், மத்திய இணை அமைச்சர்கள் நிஷித் பிராமானிக், எல்.முருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "எல்லாருக்கும் எல்லாம். அனைத்து துறை வளர்ச்சி. அனைத்து மாவட்ட வளர்ச்சி. அனைத்து சமூக வளர்ச்சி என்பதை, உள்ளடக்கமாக கொண்ட நமது திராவிட மாடல் ஆட்சியிலே, அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக வளர உழைத்துக்கொண்டு வருகிறோம். ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது, எப்படி நம்முடைய இலக்கோ, அதேபோல், தமிழ்நாட்டை இந்தியாவினுடைய விளையாட்டுத் தலைநகரமாக நிலைநிறுத்துவதும் நம் குறிக்கோள். இந்த இலக்கை நோக்கிப் பயணிக்கும் அமைச்சர் உதயநிதியை நான் பாராட்டுகிறேன்.

திமுக அரசு பொறுப்பேற்றப்பிறகு, சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஏடிபி சேலஞ்சர் டூர், சென்னை ஒபன் சேலஞ்சர், ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி-2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை -2023, அலைச்சறுக்குப் போட்டி, கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளை, தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதேநேரத்தில் விளையாட்டுக் கட்டமைப்புகளையும் உலக தரத்துக்கு உயர்த்திக்கொண்டு வருகிறோம்.

இந்தியாவிலேயே முதல்முறையாக பாரா வீரர்களுக்கு 6 விளையாட்டு அரங்கங்கள், ராமநாதபுரத்தில் ஒலிம்பிக் நீர் விளையாட்டரங்கம், சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி, முதற்கட்டமாக 10 சட்டமன்ற தொகுதிகளில் மினி ஸ்டேடியம். புதிய மாவட்டங்களான தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டில் மாவட்ட விளையாட்டு மையங்கள் என்று பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ஜல்லிக்கட்டுக்கு மதுரையில் 62 கோடியே 72 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தை வரும் 24-ம் தேதியன்று ,நான் திறந்து வைக்கிறேன். தமிழ்நாட்டு விளையாட்டு அறிவியல் மையம் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில், வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

மணிப்பூரில் நிலவும் பிரச்சினைகளால், அங்குள்ள விளையாட்டு வீரர்கள் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாமல் போக, அவர்களை சகோதர உணர்வோடு தமிழகத்துக்கு வரவேற்று, பயிற்சி கொடுத்து, நம்முடைய திராவிட மாடல் அரசு அவர்களில் சிலரை, இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

கேலோ இந்தியா போட்டி தமிழக்ததில் நடைபெறுவது, எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய மகிழ்ச்சி. தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், டெமோ விளையாட்டாக இந்தமுறை சேர்க்கப்பட்டிருக்கிறது. கேலோ இந்தியா-2023 லோகோவில், வான்புகழ் வள்ளுவர் இடம்பெற்றிருக்கிறார். அந்த சிலை மறைந்த முதல்வர் கருணாநிதியால், அய்யன் திருவள்ளுவருக்கு இந்தியநாட்டின் தென்முனையில் வானுயர அமைக்கப்பட்டது. அதேபோல், ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய வீரமங்கை வேலுநாச்சியாரின் சின்னமும், அதில் இடம்பெற்றிருப்பது நமக்கு கூடுதல் பெருமை.

விளையாட்டினையும், வளர்ச்சியின் இலக்காக கருதி செயல்பட்டு வருகிறோம். சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்தி, எல்லோருடை நல்வாழ்வுக்கும் விளையாட்டு உதவுகிறது. அன்பு பாலங்களையும், சமூக நல்லிணக்கத்தையும், உருவாக்கும் ஆற்றல் விளையாட்டுக்கு உண்டு. விளையாட்டுத் துறையிலும், தமிழ்நாட்டை உலகளவில் கவன ஈர்க்கிற மாநிலமாக உயர்த்த வேண்டும், என்று அமைச்சர் உதயநிதியை இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

தமிழக அரசின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும், எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு மாநிலங்களில் இருந்து பங்கேற்றிருக்கக்கூடிய 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களை வரவேற்று, வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்று முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்