பிரதமர் மோடி வருகையால் போலீஸ் கட்டுப்பாட்டில் ஸ்ரீரங்கம் கோயில்

By செய்திப்பிரிவு

திருச்சி: பிரதமர் மோடி வருகையையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக வருகை தரும் பிரதமர் மோடி, பெங்களூரூவில் இருந்து இன்று ( ஜன.19 ) மாலை 4.50 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கும் அவர், இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை ( ஜன.20 ) காலை 9.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அவரை மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

பின்னர், அங்கிருந்து அவர் ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் செல்கிறார். இதற்காக ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே ஹெலிகாப்டர் தளம் அமைக்கப் பட்டுள்ளது. பின்னர், அவர் அங்கிருந்து பஞ்சக்கரை சாலை வழியாக காரில் ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோயிலுக்கு காலை 10.55 மணிக்கு சென்றடை கிறார். அங்கு சுமார் 2 மணி நேரம் தரிசனத்துக்கு பிறகு காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று, பிற்பகல் 2.05 மணிக்கு ராமேசுவரம் சென்றடைகிறார்.

இதையொட்டி, திருச்சி மாநகர காவல் ஆணையர் என்.காமினி தலைமையில் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினரும் ( எஸ்பிஜி ) பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். கோயில் வளாகம் முழுவதும் போலீஸார் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நாளை பிற்பகல் 2.30 மணி வரை கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், கோயில் வளாகத்துக்குள் உள்ள கடைகள் நேற்று முதல் அடைக்கப் பட்டுள்ளன. இவை நாளை பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலைச் சுற்றியுள்ள கடைகளையும் நாளை காலை முதல் பிற்பகல் வரை அடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை யொட்டி, ஹெலிகாப்டர் தளம் அமைக்கப் பட்டுள்ள யாத்ரி நிவாஸ் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் கோயில் வரைசெல்லும் பஞ்சக்கரை சாலை வழி நெடுகிலும், தூய்மைப் படுத்தும் பணியும், சாலையோர சுவர்களில் வண்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, பிரதமர் வருகையையொட்டி, கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. கோயில் வளாகத்தை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள நபர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE