திமுகவின் பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது உதயநிதியின் கருத்து: எல்.முருகன் @ ராமர் கோயில்

By செய்திப்பிரிவு

கோவை: கோவை கொடிசியா அருகே உள்ள தனியார் அரங்கில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பாஜக தேசிய செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமை வகித்தார். இதில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி அஜய் கோஷ் உள் பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாகவும், வருகிற மக்களவைத் தேர்தல் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. முன்னதாக, கோவை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும் போது,‘‘தை மாதம் தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் இருள் நீங்கி ஒளி பிறக்க போகிறது. அயோத்தி ராமர் கோயில் தொடர்பாக அமைச்சர் உதயநிதி கூறிய கருத்து திமுகவின் பிற்போக்குத்தனத்தை காட்டுகிறது.

ராமர் கோயில் 500 ஆண்டு கால கனவு. லட்சியம், தியாகங்கள் நிறைவேறி, எதிர்பார்ப்புகளுடன் வருகிற 22-ம் தேதி திருவிழா நடைபெற உள்ளதை இந்தியா முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். பிற்போக்குத்தனமாக பேசும் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE