கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடக்கம்

By செய்திப்பிரிவு

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது.

வண்டலூா் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதில் முதல் கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. பொங்கலுக்கு பின், அனைத்து அரசு போக்கு வரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் இது போதுமானதாக இல்லை. மேலும் அங்கு ஆட்டோ சேவை வசதியும் இல்லை. பொது மக்கள் வசதிக்காக பிரீ பெய்டு ஆட்டோ சேவையை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் நேற்று முதல் பேருந்து நிலையத்தில் பிரீ பெய்டு ஆட்டோ சேவை தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்ட ஆட்டோக்கள் நேற்று முதல் பயணிகளை ஏற்றி சென்றனர். அரசு நிர்ணயித்த கட்டணம் கிலோ மீட்டருக்கு ரூ. 18 மட்டுமே வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பேருந்து நிலையத்தில் அனுமதி அளிக்கப்பட்ட ஆட்டோக்களின் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே ஆட்டோ நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இருக்கை வசதிகள் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படவில்லை. இந்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், ரூ.18 கட்டணத்தை உயர்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும் எனவும் ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE