திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் வேலை பார்த்த இளம் பெண்ணுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின், மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர்.

திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரதுமனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

வேலை பிடிக்கவில்லை ஊருக்குப் போகிறேன் என கிளம்பிய அந்தப் பெண்ணை அனுப்ப மறுத்து கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளனர். மேலும்,பேசியபடி சம்பளத்தையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து வெளியே சொன்னால் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொங்கலையொட்டி ஊருக்குச் சென்ற அந்தப் பெண், பெற்றோரிடம் நிலைமையைக் கூறி கதறி அழுதுள்ளார். உடல் முழுவதும் தீக்காயங்கள், தழும்புகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்த பெற்றோர், மகளை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனை சார்பில் எம்எல்ஏவின் மகன் வீடு அமைந்துள்ள, நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து, போலீஸாரிடம் கேட்டபோது, ‘புகார் தொடர்பாக விசாரணையை தொடங்கி விட்டோம். தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

இந்த விவகாரம் குறித்து, திமுகவைச்சேர்ந்த பல்லாவரம் தொகுதி எம்எல்ஏஇ.கருணாநிதியிடம் கேட்க முற்பட்டபோது அவர் பேச மறுத்துவிட்டார். அதேபோல் அவரது மகன் ஆண்ட்ரோ மதிவாணனை தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. குறுந்தகவல் மற்றும் வாட்ஸ்-ஆப் மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பான புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸார் சிஎஸ்ஆர் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சம்பந்தப்பட்ட இளம்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அப்பெண் கூறியிருப்பதாவது: முகவர் மூலம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதி மகன் வீட்டுக்கு வேலைக்குசென்றேன். வேலைக்கு சேர்ந்த 2 நாளிலேயே என்னால் முடியாது என்றேன். அப்போது என்னை அடித்து உதைத்து எனது போனை பிடுங்கி வைத்துக் கொண்டனர். வேலை செய்துதான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தினர். நடந்த விவரத்தை எனது தாயாரிடம் சொல்ல முடியாதபடி செய்தனர்.

முதலில் 6 மாதத்தில் அனுப்பி வைப்பதாகக் கூறினர். வரும்போதும், போகும்போதும் காரணமே இல்லாமல் கன்னத்தில் அடிப்பார்கள். என்னைத் தாக்கும்போது காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கமாட்டார்கள். மஞ்சள் வைத்து எனது காயத்தை நானே குணப்படுத்த வேண்டும். காலை 6 மணிக்கு ஆரம்பித்தால் நள்ளிரவைத் தாண்டியும் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். வீட்டுக்கு என்னை அனுப்பி வையுங்கள் என கூறி காலில் விழுந்து கெஞ்சியும் அவர்கள் விடவில்லை.

எனது தலைமுடியைக் கூட வெட்டினர். எனது முகமே மாறிவிட்டது. எம்எல்ஏ மருமகள் நான் ஒரு வார்த்தை சொன்னால் உன் வீடே இல்லாமல் ஆக்கி விடுவார்கள். உன் நடத்தை சரியில்லை என வதந்தி பரப்பி விடுவேன் என மிரட்டினார். பாத்திரம் சரியாக கழுவவில்லை என்றாலோ, துணியை சரியாக மடித்து வைக்கவில்லை என்றாலோ விதவிதமாகக் கொடுமைப்படுத்துவார்கள்.

மிளகாய் தூளை கரைத்து குடிக்க வைத்தனர். காரத்தால் துடிப்பேன். அப்போது, தண்ணீர்கூட குடிக்க அனுமதிக்க மாட்டார்கள். 7 மாதம் வேலை செய்தும் எந்த சம்பளமும் கொடுக்கவில்லை எனக் கூறி அழுவதோடு வீடியோ காட்சி முடிகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: சென்னை பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ கருணாநிதியின் மகன், வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், எம்எல்ஏ-வின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்யவந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது.

மாதம் ரூ.16 ஆயிரம் ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5 ஆயிரம் மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. விரைவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE