அலங்கநல்லூர் கீழக்கரை புதிய அரங்கில் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி திறந்து வைக்கும் அலங்கநல்லூர் கீழக்கரை புதிய அரங்கில் தமிழக அரசு சார்பில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு நாளை (ஜன.19) தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தன. அடுத்தகட்டமாக, அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கில் வரும் 24-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. 24-ம் தேதி காலை முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை வந்து கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கைத் திறந்து வைத்து புதிய அரங்கில் நடக்கும் போட்டியைத் தொடங்கி வைக்கிறார்.

இதுவரை கம்புகளைக் கொண்டு அமைத்த கேலரிகளில் பொதுமக்கள் தொங்கிக் கொண்டும், பாதுகாப்பு இல்லாமலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒருவித பதற்றத்துடன் பார்த்து வந்தனர். கிரிக்கெட் மைதானம் போல் மிகப் பிரம்மாண்டமாக உயர்தொழில் கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய அரங்கில் பார்வையாளர்கள் பிரம்மாண்ட கேலரிகளில் அமர்ந்து முதல் முறையாக நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க ஆவலாக உள்ளனர்.

இதுவரை தமிழகத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மட்டுமே அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது கீழக்கரை ஜல்லிக்கட்டுப் போட்டியும் அரசு சார்பில் நடத்தப்படுவதால் இனி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் 4 ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.

கீழக்கரை புதிய அரங்கில் 24-ம் தேதி மட்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதா அல்லது தொடர்ந்து 5 நாட்கள் போட்டி நடத்துவதா என அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாகப் பார்க்க முடியாத உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள், தமிழகத்தின் பிற மாவட்ட, மாநில மக்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்த புதிய அரங்குக்கு வந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்கலாம்.

கிரிக்கெட் மைதானத்தில் பார்வையாளர்களுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்குமோ? அத்தனை வசதிகளும் இந்த புதிய ஜல்லிக்கட்டு அரங்கில் கிடைக்கும். இதனால், ஜல்லிக்கட்டு பார்க்க வரும் பார்வையாளர்களும் இனி, கிரிக்கெட் போட்டியைப் போல் ஸ்நாக்ஸ், டீ சாப்பிட்டக் கொண்டே ஜல்லிக்கட்டுப் போட்டியை கண்டு களிக்கலாம். கார், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி, முக்கியச் சாலைகளில் இருந்து இந்த அரங்குக்கு வருவதற்கு பிரத்யேகமான புதிய இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

ஜல்லிக்கட்டு நடக்கும் நாட்களில் மதுரை மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் இருந்து கீழக்கரை கிராமத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இது குறித்து ஆட்சியர் சங்கீதா கூறியதாவது: "தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் என்னென்ன வழிகாட்டுதல் நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுமோ அவை அனைத்தும் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் நடத்தப்படும் போட்டிகளுக்கும் பொருந்தும். எனவே, மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் நாளை (ஜன.19) முதல் முன்பதிவு செய்யலாம். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் madurai.nic.in என்ற வலைதளத்தை உருவாக்கியுள்ளது.

நாளை பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் (ஜன.20) பகல் 12 மணி வரை மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் முன்பதிவு செய்யலாம். வலைதளத்தில் பதிவு செய்யும் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் தங்கள் மருத்துவச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். சான்றுகள் சரி பார்க்கப்பட்ட பின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் போட்டியில் பங்கேற்பதற்கான டோக்கன்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்" என்று அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE