தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கும் பணி ஆணைகளை உடனே வழங்குக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசிரியர் பணிக்கு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான ஒதுக்கீட்டில், தேர்வு செய்யப்பட்டோருக்கு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணியமர்த்தல் ஆணை வழங்கப்படவில்லை. பிற பிரிவினருக்கு பணி ஆணை வழங்கப்பட்ட நிலையில், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட இல்லாத காரணங்களைக் கூறி, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும், பணி ஆணைகள் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கு 1325 சிறப்பாசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த 26.07.2017-ஆம் நாள் வெளியிடப்பட்டு, 23.09.2017-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடத்தப் பட்டன. அதனடிப்படையில் தையல், ஓவியம், இசை ஆகிய பாடங்களுக்கான சிறப்பாசியர்கள் கடந்த 2019-ஆம் ஆண்டிலும், உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்கள் 2020-ஆம் ஆண்டிலும் நிரப்பப்பட்டன.

ஆனால், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு மட்டும் 6 ஆண்டுகளுக்கும் மேலாகியும் பணி ஆணை வழங்காமல் தேர்வு வாரியம் தாமதித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இவ்வளவு நீண்ட தாமதத்திற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்ட போதே, தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப் பட்டது. ஆனால், அதை எதிர்த்து சிலர் வழக்கு தொடர்ந்ததையடுத்து தெரிவுப்பட்டியல் கைவிடப்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு, அந்தத் தீர்ப்புக்கு ஏற்ற வகையில் அடுத்தப்பட்ட நடவடிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் மறுக்கிறது. அதற்கான காரணம் தான் தெரியவில்லை.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேருக்கு பணி ஆணைகளை வழங்குவதில் செய்யப்படும் தாமதம் குறித்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12&ஆம் நாள் விரிவான அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன் பிறகாவது சிறப்பாசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் வழியில் படித்தவர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கலாம்; அப்பட்டியலை வெளியிடுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதற்கான காரணத்தையாவது தெரிவித்து இருக்கலாம். ஆனால், இரண்டையுமே செய்யாததன் மூலம் தமிழ்வழியில் படித்து, சிறப்பாசிரியர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் உணர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் அவமதித்திருக்கிறது. இது நியாயம் அல்ல.

சிறப்பாசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளை தமிழ் வழியில் படித்தவர்கள் பெரும் கனவுகளுடன் தான் எழுதினார்கள். சிறப்பாசிரியர்களுக்கான அரசுப் பணி வாய்ப்பு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வரும் நிலையில், போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்றி அரசுப் பணிக்கு சென்றால் தங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் தான் பல்லாயிரக்கணக்கானோர் இத்தேர்வுகளை எழுதினார்கள். தேர்வில் வெற்றி பெற்று, தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலிலும் தங்களின் பெயர்கள் இருப்பது உறுதியான நிலையில், அப்பட்டியல் திரும்பப் பெறப்பட்டது அவர்களுக்கு பேரிடியாக அமைந்தது.

நீதிமன்ற வழக்குகளும் முடிவுக்கு வந்து விட்ட நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியல் இன்று வெளியாகும், நாளை வெளியாகும் என்று ஒவ்வொரு நாளையும் கடுமையான மன உளைச்சலுடன் தேர்வர்கள் கடக்கின்றனர். அவர்களில் பலருக்கு நாற்பது வயதுக்கும் மேலாகி விட்டதால், வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை; அதன்பின் கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பாசிரியர் பணிக்கு அடுத்த ஆள்தேர்வு அறிவிக்கையும் வெளியிடப்படாததால் எதிர்காலம் என்னவாகும்? என்பதே தெரியாமல் தமிழ்வழியில் படித்த சிறப்பாசிரியர்கள் தவித்து வருகின்றனர். அவர்களின் உணர்வுகளை வாரியம் மதிக்க வேண்டும்.

தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்து விட்டது. இதுதொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. அதனால், தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்பாசிரியர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட எந்தத் தடையும் இல்லை. எனவே, தமிழ்வழியில் கற்று சிறப்பாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 229 பேரின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும். அவர்களுக்கான பணியமர்த்தல் ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்