சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பொழுதுபோக்கு இடங்களுக்கு மக்கள் குடும்பத்துடன் சென்று காணும் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினர். சென்னை மெரினா கடற்கரைக்கு காலை முதலே மக்கள் கூட்டம் வரத் தொடங்கியது. சென்னை மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வருகை புரிந்தனர்.
இதனால் நேரம் செல்ல செல்ல பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது. மாலை வேளையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். குடும்பத்தினருடன் கடற்கரை மணலில் அமர்ந்து பொழுதை போக்கி மகிழ்ந்தனர். குழந்தைகளும் கடற்கரை மணலில் உற்சாகமாக ஓடி ஆடி விளையாடி குதூகலித்தனர்.
மெரினாவுக்கு வருகை தந்திருந்த மக்கள் பலரும் கலங்கரை விளக்கத்தின் மேலே சென்று பரந்து விரிந்த கடற்கரையின் அழகைக் கண்டு ரசித்தனர். கலங்கரை விளக்கத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி மாலை 5.30 மணி வரை மட்டுமே வழங்கப்பட்டிருந்ததால், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இருந்தாலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து மகிழ்ந்தனர்.
இதற்கிடையே, மெரினா கடற்கரையில் கூட்டத்தை பயன்படுத்தி குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் திருடர்களைப் பிடிக்கவும், பெண்களிடம் அத்துமீறுபவர்களை கட்டுப்படுத்தவும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
» அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பு நிலம் வழங்கிய பூரணம் அம்மாளுக்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு
சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், காந்தி சிலை வரை 3 தற்காலிக போலீஸ் கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தன.
மெரினாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கோபுரங்களில் நின்றவாறு கண்காணித்தபடியும், ஒலிபெருக்கி மூலம் கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்களுக்கு தகுந்த அறிவுரைகளையும் வழங்கி வந்தனர்.கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும், 200-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல், கடற்கரை மணல் பரப்பில் குதிரைப்படையினர் ஒருபுறமும், ரோந்து வாகனங்கள் மூலமாக மற்றொரு புறமும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர். காவல்துறையின் நவீன ட்ரோன் கேமராக்களும் ஆங்காங்கே பறந்தவண்ணம் இருந்தன.
மேலும் கடற்கரைக்கு குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு காவல் உதவி மையங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறைகளில் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. இதில் பெற்றோரின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. இவற்றை போலீஸார் குழந்தைகளின் மணிகட்டுகளில் கட்டி கடற்கரைக்கு அனுப்பி வைத்தனர். இரவு 10 மணி வரை மட்டுமே மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மெரினாவைப் போன்று, தீவுத்திடலில் நடைபெற்று வரும் 48-வது சுற்றுலா பொருட்காட்சியிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த 49 அரங்குகள், பொழுதுபோக்கு விளையாட்டுகள், உணவகங்கள் என பல்வேறு அம்சங்கள் நிறைந்திருப்பதால் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் நாட்களில் இருந்ததைக் காட்டிலும் காணும் பொங்கலான நேற்று பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பல்வேறு வகையான வனவிலங்குகள், பறவை இனங்களைக் கண்டு உற்சாகத்துடன் பூங்காவில் பெற்றோருடன் குழந்தைகள் வலம் வந்தனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கேளிக்கை பூங்காக்கள், முட்டுக்காடு படகு குழாம், கோவளம் கடற்கரை, வடநெம்மேலி முதலை பண்ணை, திருவான்மியூர், திருவிடந்தை, பழவேற்காடு, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம், காசிமேடு போன்ற கடற்கரைகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
பழவேற்காடு கடற்கரையில் சுமார் 25 ஆயிரம் பொது மக்கள் குவிந்தனர். 150 போலீஸார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர். நந்தனத்தில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சி, நந்தம்பாக்கத்தில் சர்வதேச புத்தகக் கண்காட்சி, பல்வேறு இடங்களில் நடந்துவரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் ஆகியவையும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பின. அதேபோல், மாநகராட்சி பூங்காக்கள், பிரபல வணிக வளாகங்கள், திரையரங்குகள், கோயில்களிலும் மக்கள் குடும்பங்களுடன் சென்று தங்களது நேரங்களை செலவிட்டனர்.
மக்கள் அதிகம் கூடும் முக்கியமான இடங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிமீறல்கள் ஏற்படாமல் தடுக்கவும் போக்குவரத்து காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து மாற்றம்: அதன்படி சென்னை முழுவதும் 3,168 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே வாகன சோதனைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மெரினா கடற்கரையில் பொதுமக்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.
காணும் பொங்கல் விழாவை கொண்டாடுவதற்காக மாமல்லபுரத்தில் திரண்ட மக்கள் அங்குள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, கிருஷ்ண மண்டபம், அர்ஜுனன் தபசு, புலிக்குகை, கலங்கரை விளக்கம் ஆகிய சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago