மதுரை: நடிகர் சூரியின் காளை தாமதமாக வந்த போதிலும் அதற்கு முன்னுரிமை கொடுக்க அதிகாரிகள் போராடினர். மேலும் அதிகாரிகளின் மெத்தனத்தால் ஜல்லிக்கட்டு போட்டி தாமதமாக முடிந்தது. அந்த வகையில் புதன்கிழமை நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் நடந்த கவனம் ஈர்த்த சம்பவங்களைப் பார்ப்போம்.
> அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் காளைகள், பிடிப்பட்டாலும், பிடிபடாவிட்டாலும் கடைசியில் காளைகள் சேகரிக்கும் இடத்தில் ஓடிப்போய் நிற்கும். அங்கு காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளை பிடித்து அழைத்துசெல்ல வேண்டும். அதில் சில காளைகள் பிடிப்படாமல் ஊருக்குள் வந்துவிடும். சில காளைகள், ஓடிச்சென்று காணாமல் போய்விடும். காளை உரிமையாளர்கள், ஒரு வாரம், ஒரு மாதம் முழுவதும் தேடி ஜல்லிக்கட்டு காளை கண்டுபிடிக்கும் சம்பவங்களும் நடக்கும். அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் சேரிக்கும் இடத்தில் போலீஸார் பாதுகாப்பு சரியாக போடப்படவில்லை.
அதனால், உள்ளூர் இளைஞர்கள், சிறுவர்கள், காளைகள் சேகரிக்கும் இடத்தில் குவிந்து, ஓடி வந்த காளைகளின் கொம்புகளை பிடித்தும், திமில்களை பிடித்தும் அடக்க ஆரம்பித்தனர். அதனால், வாடிவாசலில் ஒரு ஜல்லிக்கட்டும், காளைகள் சேகரிக்கும் இடத்தல் இரண்டாவது ஜல்லிக்கட்டும் நடந்தது. அதில் சினம் அடைந்த சில காளைகள் பார்வையாளர்கள் பகுதியில் புகுந்து பொதுமக்களையும், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர், 5 போலீஸார் பலரை முட்டி தாக்கினர். பலர் இதில் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
> முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது காளையை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்தார். அவர் கூறுகையில், “அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் என்து காளையை தவறாமல் அவிழ்ப்பது வழக்கம். எனது வெள்ளை கொம்பன் காளையை இந்த ஆண்டும் அவிழ்ப்பதில் மகிழ்ச்சி’’ என்றார்.
» ஜன.24-ல் அலங்காநல்லூர் கீழக்கரையில் புதிய ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்
» ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை - பரிசீலிப்பதாக அமைச்சர் உதயநிதி தகவல்
> நடிகர் சூரியின் காளையும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாடுவதற்கு வந்திருந்தது. அந்த காளை 90-ம் நம்பர் டோக்கன் பெற்றிருந்தாலும் வரிசை முறையில் எந்த இடத்தில் நிற்கிறது என்பது தெரியவில்லை. நள்ளிரவே வந்து காத்து கிடந்தால் மட்டுமே காளையை முன்கூட்டியே அவிழ்க்க முடியும். ஆனால், சூரி தாமதமாக காளையை கொண்டு வந்ததால் அவரால் முன்கூட்டியே அவிழ்க்க முடியவில்லை. ஆனால், அவர் மேடையில் இருந்த உதயநிதியிடம் தனக்கு உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, காளையை முன்கூட்டியே அழைக்க ஏற்பாடு செய்தார். விழா கமிட்டியினர், அனைத்து துறை அதிகாரிகளும் சூரியின் காளை வாடிவாசல் பின் பகுதி வரிசையில் எங்கு இருக்கிறது என தேடினர்.
அதனை உடனடியாக வாடிவாசலுக்கு அனுப்ப கால்நடை பராமரிப்பு துறைக்கு மாவட்ட உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து உத்தரவுகள் பறந்து கொண்டிருந்தது. மறைத்து செய்ய வேண்டிய இந்த விஷயத்தை, மேடையில் வர்ணணை செய்த விழாக்குழுவினர், ‘‘ஏப்பா சூரி மாட்டை முன்னாடி விடுங்கப்பா, எங்கிருந்தாலும் அழைத்துவாங்கப்பா’’ என்று ஓப்பன் மைக்கில் தெரிவித்தனர். ஆனால், கடைசிவரை அவரது மாடு எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. சூரி காளை அவிழ்ப்பதற்காக காத்திருந்த அமைச்சர் உதயநிதி ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து சென்றுவிட்டார்.
> 545 மாடுபிடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க வாடிவாசலுக்கு காலை வந்திருந்தனர். அவர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்ததில் மது அருந்தியது, 18 வயதிற்கு குறைந்தவர்கள், உடல்நலக் குறைவு போன்ற பல காரணங்களால் 45 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
> அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை 7 மணிக்கு தொடங்கினாலும், மாலை போட்டி முடிவதற்கு 6.10 மணி ஆகிவிட்டது. இதற்கு, மாவட்ட நிர்வாகத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், அமைச்சர் உதயநிதியை வரவேற்பதிலும், அவரை ஜல்லிக்கட்டு பார்த்து திரும்பி செல்லும் வரை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதிலுமே கவனமாக இருந்ததால் காளைகளை அவிழ்ப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அந்த தாமதத்தை கண்டறிந்து போட்டியை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உதயநிதி சென்றபிறகே அமைச்சர் பி.மூர்த்தி, போட்டியை கையில் எடுத்து நடத்த ஆரம்பித்தார். அதன்பிறகு போட்டி வேகமெடுத்தாலும் போட்டி தாமதமாகவே முடிந்தது.
> ஐபிஎல் போட்டிகளைப் போல ஜல்லிக்கட்டுப் போட்டிகளையும் லீக் முறையில் ஆண்டு முழுவதும் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும், ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். மேலும், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் பிரமாண்டமான ஜல்லிக்கட்டு அரங்கத்தை கட்டியுள்ளோம். இந்த அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 24-ம் தேதி திறந்து வைக்க உள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
> இன்று நடந்த உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார். இந்தப் போட்டியில் 83 பேர் காயமடைந்த நிலையில், 11 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். முழுமையாக வாசிக்க > 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு, காயம் 83 பேர்... - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்
> “ஜல்லிக்கட்டு போன்ற ஒரு வீர விளையாட்டை உலகில் வேறு எந்த நாட்டிலிலும் நாங்கள் பார்த்ததில்லை, ’’ என்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வியந்தனர். வாசிக்க > “ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டை உலகில் எங்கும் பார்த்தது இல்லை!” - வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கேலரியை ஆக்கிரமித்த உள்ளூர் விஐபிகள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒவ்வொரு ஆண்டும் அமர்ந்து பார்க்கும் கேலரியில் இந்த ஆண்டு உள்ளூர் அரசியல்வாதிகள், அவர்கள் குடும்பத்தினர் ஆக்கிரமித்து கொண்டதால் ஜல்லிக்கட்டு பார்க்க வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 2 மணி நேரமாக வெயிலில் தவித்தனர்.
வெளிநாட்டினர் பார்வையிடுவதற்காகவே, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் அருகே ‘உலக சுற்றுலாப் பயணிகள் கேலரி’ என்ற கேலரி அமைக்கப்பட்டிருக்கும். இந்த கேலரியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிப்ட் முறையில் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பார்கள். ஆனால், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் வந்த விஐபி அரசியல்வாதிகள், அனைவரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கேலரியில் போய் அமர்ந்து கொண்டனர். அவர்கள் உதயநிதி ஸ்டாலின் மதியம் 12 மணிக்கு செல்லும் வரை, அமர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்டனர்.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவதற்காக சுற்றுலாத் துறையினரால் அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு சுற்றலாப் பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், விழா மேடை அருகே தங்கள் கேலரிக்கு செல்ல இடமில்லாமல் காலை 9.30 மணிமுதல் 11.30 மணி வரை வெளியலில் காத்திருந்தனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், வருவாய்துறை அதிகாரிகள் வெளிநாட்டினர் கேலரியில் அமர்ந்திருந்த விஐபி அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் வெளியேற்ற முடியாமல் வெளிநாட்டினரையும் காத்திருக்க வைக்க முடியாமல் பரிதவிப்பிற்கும், தர்ம சங்கடத்திற்கும் ஆளாகினர்.
இதற்கிடையில், சுற்றுலாத் துறை அதிகாரிகளையும், வழிகாட்டிகளையும், வருவாய்துறை அதிகாரிகள், நாங்கள் சொன்ன பிறகு அழைத்து வந்திருக்கலாமே, ஏன் உடனடியாக அழைத்து வந்துவிட்டீர்கள் என்று கடிந்து கொண்டனர். இரு தரப்பினருக்குமான வாக்குவாதமும், வெளிநாட்டினரின் பரிதவிப்பும், அப்பகுதியில் பரபரப்பையும், தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், வெளிநாட்டினர் காத்திருப்பிற்கும் மத்தியில் எந்த அதிருப்தியையும், சலசலப்பையும் வெளிகாட்டாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அவரது அமைதியும், பொறுமையுமே நேற்று அப்பகுதியில் பிரச்சினை எதுவும் வரவில்லை.
மதியம் 11.45 மணியளவில் அமைச்சர் உதயநிதி புறப்பட தயாரானதால் வெளிநாட்டினர் கேலரியில் அமர்ந்திருந்த விஐபி அரசியல்வாதிகள், அதிகாரிகள் அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக புறப்பட்டு வெளியே வர ஆரம்பித்தனர். பெரும் நிம்மதியடைந்த காவல்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள், வெயிலில் காத்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை, அவர்களுடைய கேலரிக்கு கொண்டு சென்று அமர வைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago
தமிழகம்
21 hours ago